Rs. 55 crore loss by GST Unable to send manufactured clothes

கரூர்

சரக்கு மற்றும் சேவை வரி அமலானதால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளையும் அனுப்ப முடியாமல் இதுவரை சுமார் ரூ.55 கோடி மதிப்பிலான ஜவுளிகள் லாரி குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன என்று கரூரில் நெசவு மற்றும் பனியன் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தனபதி தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் நெசவு மற்றும் பனியன் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தனபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “ஜிஎஸ்டி எனும் சரக்கு சேவை வரியில் இருந்து விலக்கு கோரி, சென்ற மாதம் 27, 28, 29-ஆம் தேதிகளில் விசைத் தறி மற்றும் அவைச் சார்ந்த ரசாயன, நூல் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அரசு எங்களது போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை. சரக்கு மற்றும் சேவை வரி அமலானதையொட்டி, வெளி மாநில ஆர்டரும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட துணிகளையும் அனுப்ப முடியாததால், இதுவரை சுமார் ரூ.55 கோடி மதிப்பிலான ஜவுளிகள் லாரி குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன” என்று தெரிவித்தார்.

அப்போது உடனிருந்த கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அன்பொளி காளியப்பன் கூறியது:

“இந்தப் புதியச் சட்டத்தால் ஜவுளித் தொழிலுடன் தொடர்புடைய சார்புத் தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிளிச்சிங், டையிங், தையல், முடிபோடுதல் போன்ற ஜாப் ஒர்க் செய்யும் தொழிலாளர்களுக்கு கிடுக்கிப்பிடி ஏற்பட்டுள்ளது. 

நூல் வாங்குவது முதல் அதனை துணியாக்கி விற்பது வரை 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியுள்ளது. எனவே, கைத்தறிக்கு விலக்கு அளிக்கப்பட்டது போல விசைத்தறிக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் திங்கள்கிழமை மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியை சந்திக்க உள்ளோம்.

அந்த சந்திப்பில் தீர்வு கிடைக்காவிட்டால் 5-ஆம் தேதிக்குப் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம்” என்றுத் தெரிவித்தார்.