Rs 5 lakhs total work donation to nutrition employees while retiring ...

சிவகங்கை

ஓய்வு பெறும்போது ஒட்டுமொத்த பணி கொடையாக ரூ.5 இலட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சிவகங்கையில் திரளாக ஊர்வலம் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம், அரண்மனைவாசலில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம் சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.

இந்த ஊர்வலத்தை சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சங்கர நாராயணன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

பின்னர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு, மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி தலைமையில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டில் அழகேசன் வரவேற்று பேசினார்.

இந்த மாநாட்டில் மாநிலத் துணைத் தலைவர் பாண்டி, மாநில செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் சீமைச்சாமி, பொருளாளர் பானுமதி, நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், பழனியப்பன், மலர்கொடி, முத்துக்குமார், கண்ணன், கோமதி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், "ஏழை - எளிய மக்கள், மாணவர்கள், சத்துணவு ஊழியர்களை பாதிக்கும் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதம் ரூ.9000 ஓய்வூதிமாக வழங்க வேண்டும்.

மேலும், ஓய்வு பெறும்போது ஒட்டுமொத்த பணி கொடையாக ரூ.5 இலட்சம் வழங்க வேண்டும்.

விலைவாசி உயர்விற்கு ஏற்ப உணவு செலவினத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயக்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மதுரையில் இருந்து தொண்டிக்கு சிவகங்கை வழியாக இரயில்பாதை அமைக்க வேண்டும்.

மானாமதுரையில் இருந்து சென்னைக்கு பகல்நேர இரயில் விடவேண்டும்.

சிலம்பு விரைவு இரயிலை தினசரி இரயிலாக இயக்க வேண்டும்.

மானாமதுரை, சிவகங்கை வழியாக தாம்பரம் - செங்கோட்டை இடையே இரயில் இயக்க வேண்டும்" உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.