திண்டுக்கல்,
உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.25 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் 402 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தமிழகத்தில் பருவமழை இல்லாததால் கடுமையான வறட்சி உருவாகியுள்ளது. மேலும், அணை, குளங்கள் வறண்டுள்ளதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தண்ணீரின்றி கருகிப்போன பயிர்களைப் பார்த்து சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.25 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படியே, நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் திண்டுக்கல் அஞ்சலி ரௌண்டானாவில் இருந்து ஊர்வலம் சென்றனர்.
அப்போது தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் மழையில் நனைந்து கொண்டே ஏராளமான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றனர்.
இதனால் அங்கு திண்டுக்கல் புறநகர் காவல் துணை சூப்பிரண்டு கோபால் தலைமையில் சுமார் 100 காவலாளர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். பின்னர் விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்லவிடாமல், நுழைவு வாயிலிலேயே காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் காவலாளர்களைத் தள்ளிக் கொண்டு விவசாயிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர்.
பின்னர், மழையில் நனைந்தபடியே அங்கு அமர்ந்து காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டனர்.
அப்போது அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வசந்தாமணி, “தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் பயிர்கள் கருகிவிட்டன. மேலும் கால்நடைகளுக்கும் போதிய தீவனம் இல்லை. இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி, தொழிலாளர்களுக்கு ரூ.400 சம்பளம் வழங்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் செல்வராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வசந்தாமணி, செயலாளர் குணசேகரன் உள்பட 402 பேரை கைது செய்து காவலாளர்கள் வேனில் ஏற்றினர்.
பின்னர், அஞ்சலி ரௌண்டானா அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
