நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் வாங்கியிருந்த ரூ.232 கோடியே 14 இலட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய ரூ.5,780 கோடி பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்டகால கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.

அவரது உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 165 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 3 மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் உள்பட 168 கூட்டுறவு சங்கங்களில் 31.3.2016 அன்று நிலுவையில் இருந்த வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த கடன்களில் சிறு, குறு விவசாயிகள் 46 ஆயிரத்து 471 பேருக்கு ரூ.221 கோடியே 23 இலட்சம் அசல் தொகையும், ரூ.9 கோடியே 16 இலட்சம் வட்டியும், அபராத வட்டி மற்றும் செலவினத்தொகை உள்பட மொத்தம் ரூ.230 கோடியே 76 இலட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 7 தொடக்கக்கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் 31.3.2016 அன்று நிலுவையில் இருந்த நீண்டகால கடன்களில் 163 நபர்களுக்கு ரூ.73 இலட்சம் அசல் தொகையும், ரூ.62 இலட்சம் வட்டியும், ரூ.3 இலட்சம் அபராத வட்டியும் என மொத்தம் ரூ.1 கோடியே 38 இலட்சம் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

மொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் 46 ஆயிரத்து 634 விவசாயிகளின் ரூ.232 கோடியே 14 இலட்சம் கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டது” என்று ஆட்சியய்ர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.