வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், மாவட்ட வாரியாக எத்தனை ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க கணக்கெடுப்பு பணிகள் ஜரூராகத் தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் 2 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். சென்னை மாநகரில் 15 மண்டலங்கள் உள்ளன. இதில் சென்னை மாநகரில் 5 லட்சத்து 11 ஆயிரம் ஏழை தொழிலாளர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் அதிகபட்சமாக 98 ஆயிரத்து 612 பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். திருவொற்றியூர் மண்டலத்தில் 46,096 பேர் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மணலியில் 9,271 பேர், மாதவரம் பகுதியில் 16,323 பேர், ராயபுரம் பகுதியில் 41,958 பேர், திரு.வி.க. நகரில் 51,654 பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் மண்டலத்தில் 32,077 பேரும், அண்ணாநகர் மண்டலத்தில் 25,804 பேர், தேனாம்பேட்டை பகுதியில் 46,685 பேர், கோடம்பாக்கம் மண்டலத்தில் 25,300 பேர், வளசரவாக்கம் பகுதியில் 16,250 குடும்பங்கள் ஏழைகள் பட்டியலில் உள்ளனர். அடையார் மண்டலத்தில் 62,552 பேர் ஏழை தொழிலாளர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

பெருங்குடி பகுதியில் 16,502 பேர், சோழிங்கநல்லூர் பகுதியில் 14,331 பேர் வறுமைகோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். 15 மண்டலங்களிலும் மிக, மிக குறைவாக ஆலந்தூர் மண்டலத்தில் 7,473 பேர் ஏழை தொழிலாளர்களாக இருக்கிறார்கள். 15 மண்டலங்களிலும் நிறைய பேர் வறுமைகோட்டுக்கு கீழ் இருப்பதாக மனு செய்து இருந்தனர்.

அந்த மனுக்களை ஆய்வு செய்ததில் 11,953 பேர் போலி ஆவணங்கள் கொடுத்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த 11,953 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கணக்கெடுப்புகள் தொடங்கியுள்ளன. பெரும்பாலும் ஏற்கெனவே கணக்கெடுக்கப்பட்டுள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை கொண்டே ஏழைகளுக்கான 2000 நிதி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப்பட்டியலில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இடம்பெறாவிட்டால் மீண்டும் இணைந்து கொள்வதற்கான அறிவிப்புகள் வெளியாகும். அரசு ஊழியர்களை உள்ளிட்ட சிலரை தவிர பிறருக்கு பெரும்பாலும் கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.