ஈரோடு 

ஈரோட்டில், தரம் குறைந்த உணவு எண்ணெய், போலி முகவரி மற்றும் தவறான விளம்பரங்களுடன் தயாரித்து விற்பனை செய்த எண்ணெய் நிறுவனத்திற்கு ரூ.11.50 இலட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. 

சமையல் எண்ணெயில் கலப்படங்களைத் தடுக்க மாநில அளவிலான குழு உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையரால் அமைக்கப்பட்டது.  இந்தக் குழுவின் மூலம் சமையல்  எண்ணெய் உற்பத்தி செய்வோருக்கான வழிமுறைகள் தயாரிக்கப்பட்டு அனைத்து நியமன அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  

அனைத்து மாவட்டங்களிலும் எண்ணெய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனை செய்வோருக்கு கூட்டங்கள் நடத்தப்பட்டு எண்ணெய் உற்பத்தி செய்வோருக்கான வழிமுறைகள் மற்றும் லேபிள் குறித்த விழிப்புணர்வு,  வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இடையன்காட்டு வலசுப் பகுதியில் 2017 டிசம்பர் 9-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வின்போது,  ஒரே நிறுவனத்தில் 16 விதமான பிராண்டுகளில் எண்ணெய்,  போலியான முகவரியுடன்,  உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் தரம் குறைவான எண்ணெய் விற்பனைக்கு அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்த 16 ஆயிரத்து 950 லிட்டர் சமையல் எண்ணெய் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டதோடு, மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. 

உணவுப் பகுப்பாய்வுக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  அனைத்து எண்ணெய் வகைகளும் தரம் குறைந்தவை,  முழுமையான விவரங்கள் இல்லாதது, போலி முகவரி மற்றும் தவறான விளம்பரங்களுடன் விற்பனைசெய்யப்பட்டது என்பது கண்டிபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து, மாவட்ட கூடுதல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தின்கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் தரம் குறைந்த உணவு எண்ணெய் போலி முகவரியுடன் மற்றும் தவறான விளம்பரங்களுடன் தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.11.50 இலட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.