Asianet News TamilAsianet News Tamil

ஆதார் மையத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது; வாட்ஸ்--அப்பில் பதிவிட்டதை நம்பி ஏமாந்த இளைஞர்கள்...

Rs 1 crore fraud arrested for working at Aadhaar Center - Young people who trusted in posting ...
Rs 1 crore fraud arrested for working at Aadhaar Center - Young people who trusted in posting ...
Author
First Published Jan 12, 2018, 9:31 AM IST


விழுப்புரம்

ஆதார் மையத்தில் வேலை வாங்கித் தருவதாக வாட்ஸ் அப்பில் பதிவிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ. 1 கோடி வரை மோசடி செய்தவரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவலாளர்கள் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள அலங்கிரி கிராமத்தைச் சேர்ந்த தெய்வீகன் மகன் தமிழ்ச்செல்வன் (23).

வாட்ஸ்--அப் மூலமாக மத்திய அரசின் ஆதார் மையத்தில் வேலை வாங்கித் தருவதாக இவர் பதிவிட்டதை நம்பி, மதுரை, திண்டுக்கல், தருமபுரி, தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டனர்.

அவர்களிடம், தமிழ்ச்செல்வன் தன்னை மத்திய அரசின் ஆதார் திட்டத்தின் மாநில கண்காணிப்பாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, ஆதார் மையங்களில் வேலைக்கு சேர விரும்புவோர் விண்ணப்ப கட்டணமாக ரூ.350-ஐ தனது வங்கிக் கணக்கில் செலுத்துமாறு தெரிவித்துள்ளார். அதனை நம்பி அவர்களும் அந்த பணத்தை கொடுத்துள்ளனர்.

பின்னர், வேலைக்கான அழைப்புக் கடிதம் வந்துவிட்டதாகக் கூறி, அவர்களிடம் ரூ.10 ஆயிரம் வீதம் வசூலித்துள்ளார்.  இந்த நிலையில், பணம் செலுத்தி நீண்ட நாளாகியும் வேலை கிடைக்காததால் சந்தேகமடைந்த இளைஞர்கள் புகார் கொடுக்கத் தொடங்கினர்.

தன்னை பிரபல அமைச்சர் ஒருவரின் உறவினர் என தமிழ்ச்செல்வன் காட்டிக்கொண்டு, அவர்களுக்கு மிரட்டல் விடுத்தாராம். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட இளைஞர், அவர் செய்த மோசடி ஆகியவை குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.

அதன்பின்னர், மாவட்ட குற்றப்பிரிவு காவலாளர்கள் நடத்திய விசாரணையில், தமிழ்ச்செல்வன் இளைஞர்களிடம் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரை காவலாளர்கள் நேற்று பிடித்து விசாரித்தனர்.

பி.எஸ்ஸி. விலங்கியல் படித்துள்ள தமிழ்ச்செல்வனை காவலாளர்கள் கைது செய்து அவரிடமிருந்து ஆதார் திட்ட போலி அடையாள அட்டை, ஆதார் பணிக்கான போலி அழைப்புக் கடிதம், இரண்டு போலி ரப்பர் ஸ்டாம்ப், செல்போன் மற்றும் ரூ.48 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios