கூட்டாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கிலோ கணக்கில் நகை அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Varichiyur Selvam appeared in court wearing kilos of jewelry: பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். இவரது கூட்டாளி விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்(38). இவருக்கும், வரிச்சியூர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 2023ம் ஆண்டு செந்தில்குமாரை ஒரு கும்பல் சுட்டுக் கொன்று, உடலை துண்டுதுண்டாக வெட்டி தாமிரபரணி ஆற்றில் வீசியது.
வரிச்சியூர் செல்வம் கூட்டாளி கொலை
இந்த கொலை வழக்கு தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி முருகேஸ்வரி விருதுநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கின் விசாரணை விருதுநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2ல் நடந்து வருகிறது.
வரிச்சியூர் செல்வம் ஆஜர்
இந்த வழக்கு நேற்று நீதித்துறை நடுவர் ஐயப்பன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், ரவுடி வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். மேலும் அவரது ஆதரவாளர்கள் சிலர் நேரிலும், புழல் சிறையில் உள்ள லோகேஷ் வீடியோ கான்பரன்ஸ் மூலமும் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மே 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜரான வரிச்சியூர் செல்வம் கழுத்தில் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க கோவை காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் வரிச்சியூர் செல்வம் இதை மறுத்து இருந்தார்.
பேரன், பேத்திகளோடு அமைதியாக வாழ்கிறேன்...
''இப்போது நான் எங்கும் செல்வதில்லை போலீசுக்கு கட்டுப்பட்டு எந்த பிரச்சனைக்கும் செல்லாமல் எனது பேரன் பேத்திகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி தவறான செய்தி வருகிறது. நான் திருந்தி பல ஆண்டுகள் ஆகி விட்டது. அமைதியாக இருந்தாலும் என் மீது அவதூறு பரப்புகின்றனர். நான் எங்கு சென்றாலும் போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு தான் போகிறேன். ரவுடியிசம் செய்தால் தான் காவல்துறை சுட்டுக் கொல்லும். காவல்துறைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கும் என்னை காவல் துறை ஏதும் செய்யாது'' என்று தெரிவித்தார்.

