rouge killed while came out for bail in jail
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிணையில் வெளிவந்த ரௌடியை கத்தியால் குத்தி பழிக்கு பழி தீர்த்தவர் கைது. துணையாய் இருந்து தலைமறைவானவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பத்தக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் சேசுராஜ் (38).
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் மகன் குமார் என்பவருக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் ஏற்பட்டது. இதில், குமாரின் காலை சேசுராஜ் வெட்டினார்.
இதுகுறித்து மணமேல்குடி காவலாளர்கள் வழக்குப் பதிந்து சேசுராசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், சேசுராஜ் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால், அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் சேசுராஜ் கடந்த 22-ஆம் தேதி பிணையில் வெளியே வந்தார்.
தன்னுடைய காலை வெட்டிய சேசுராஜை பழிவாங்கக் காத்திருந்த குமார், அவரது சகோதரர்கள் ராஜ்கமல், ஜெயபிரகாஷ் ஆகியோர் பத்தக்காடு குளத்துப் பகுதியில் நின்று கொண்டிருந்த சேசுராஜ், அவரது தம்பி ஞானசேகர் ஆகியோரை கத்தியால் தாக்கினர். இதில், சேசுராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஞானசேகர் பலத்த காயமடைந்ததால் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மணமேல்குடி காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலாளர்கள் அங்குச் சென்று சேசுராஜ் உடலை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவலாளர்கள் குமாரை கைது செய்தனர். தலைமறைவான ராஜ்கமல், ஜெயபிரகாஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
