School students were petrified egg nutrition is provided.

பள்ளி மாணவர்களுக்கு, சத்துணவுடன் வழங்கப்படும் முட்டை அழுகி கிடந்தது.
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் மதிய சத்துணவு வழங்கப்படுகிறது. இதில் கடந்த 1988ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் மாதத்தில் 2 எனவும், பின்னர் வாரத்தில் 1 வழங்கப்பட்ட முட்டை, தற்போது தினமும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் பயிர், கடலை, பால், வாழைப்பழம் ஆகியவையும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அஅடுத்த நந்திவரத்தில், ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு மதிய உணவு பள்ளியிலேயே சமைத்து வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டையை, அங்குள்ள சத்துணவு பணியாளர்கள் வேக வைத்து உரித்தனர். அதில், 46 முட்டைகள் அழுகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால், மாணவர்களுக்கு முட்டை வழங்குவதை நிறுத்திவிட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுகிறது. முட்டைகள் அழுகி நாற்றம் வீசுகிறது. இதனால், சத்துணவு மைய பொறுப்பாளர்கள் அந்த முட்டைகளை வெளியே கொட்டும் நிலை உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு முட்டை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றனர்.