நடிகர் கமலஹாசன் நடித்த குரு மற்றும் ஷங்கர் டைரக்சனில் அர்ஜுன் நடித்த ஜென்டில் மேன் போன்ற படங்களைப் போன்று தனது தாயின் பெயரில் முதியோர் இல்லம் தொடங்க 6 வீடுகளில் 120 சவரன் நகைகளை கொள்ளையடித்த நபரை நொளம்பூர் போலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை நொளம்பூர்  என்பது தமிழக காவல் துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் உட்பட பல முக்கிய ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் விஐபி ஏரியா. இந்த பகுதியில் கடந்த மாதம் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள் நொளம்பூர் போலீசாரை தூக்கமிழக்க செய்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் யாரும் இல்லாத வீடுகளை கண்டறிந்து அடுத்தடுத்து 6 வீடுகளில் 120 சவரன் கொள்ளை போனது.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பகல் நேரத்தில் கண்காணித்து இரவு நேரங்களில் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரின்  உருவம் தெரிந்தது. தனிப்படை அமைத்து அவரை தேடி வந்த நிலையில் அதே பகுதிக்கு தாமகவே வந்து வாகன சோதனையில் சிக்கிக் கொண்டார் அவர். அவரது பெயர் சேகர்..

அவரிடம் நடத்திய விசாரணையில், ஆதரவற்ற குழந்தைகளுக்கும், கைவிடப்பட்ட முதியவர்களுக்கும் உதவவே தான் ராபின்ஹூட் போன்று கொள்ளையடித்ததாக கூறியதால் போலீசார் குழப்பமடைந்தனர். கைதான சேகர் அரும்பாக்கத்தை சேர்ந்தவர், எம்.எஸ்.சி உளவியல் படிப்பை முடித்து விட்டு, திருவேற்காட்டில் மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருவது தெரிந்து போலீசார் அதிர்ந்தனர். கைதான சேகர் ஏற்கனவே குற்றவழக்கில் தொடர்புடையவர் தான் என பின்னர் தெரியவந்ததுள்ளது.

நல்லவர் போல வெளியில் காட்டிக் கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சேகர் சத்தமில்லாமல் திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் ஒரு இடத்தை வாங்கி அந்த இடத்தில் தனது தாயாரின் பெயரில் முதியோர் இல்லம் அமைக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காகவே  ஆடம்பரமான வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்ததாகவும் கூறிய சேகரிடம் 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர் 

ஆனால் கொள்ளை என்கிற கெட்ட நோக்கத்தை மறைக்கும் போர்வையாகவே சேகர் முதியோர் இல்ல முயற்சியை மேற்கொண்டதாக போலீசார் குறிப்பிட்டனர்.