robbery! A young man arrest

சென்னையில் வழக்கறிஞர் வீட்டில் இருந்து தினமும் ஏதாவது ஒரு பொருள் திருடப்பட்டு வந்த நிலையில், சிசிடிவி கேமரா மூலம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, புரசைவாக்கம், அழகப்பா சோலை, மடம் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன். இவர் வீட்டின் கீழ்த்தளத்தில் குடியிருந்து வருகிறார். முதல் மாடியில் தனது வழக்கறிஞர் அலுவலகம் நடத்தி வந்தார். இந்த நிலையில், அலுவலகத்தில் இருந்து தினமும், ஏதாவது ஒரு பொருள் ஒன்று திருட்டுப்போயுள்ளது. 

முதலில் சில்லறை காசுகள் மாயமான நிலையில், முரளி கிருஷ்ணனின் மணிபர்ஸ் திருட்டுப்போயுள்ளது. அதில் பணம், ஏடிஎம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்தன. இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸ் உதவி உமிஷனர் ஹரிக்குமாரை சந்தித்துக் கூறியுள்ளார்.

முரளி கிருஷ்ணன் வீட்டுக்கு வந்த உதவி கமிஷனர் ஹரிகிருஷ்ணன், அலுவலகத்தில் சிசிடிவி கேமராவை பொருத்தும்படி கூறியுள்ளார். அதன்படி கடந்த 1 ஆம் தேதி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

வழக்கம்போல் அலுவலகத்துக்குள் வந்த திருடன், அங்கிருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனைத் திருடிவிட்டு தப்பியுள்ளார். செல்போன் திருட்டு போனது குறித்து, முரளி கிருஷ்ணன், போலீசில் புகார் கூறினார். அதன் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, இளைஞர் ஒருவர், செல்போனை திருடிச் செல்லும் காட்சிகள் பதிந்துள்ளன. அந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார், திருடனை தீவிரமாக தேடி வந்தனர். புரசைவாக்கம் அழகப்பா சாலையைச் சேர்ந்த சுபாஷ் (எ) லாசர் (19) என்பவர்தான், வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து திருடியுள்ளது தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் சுபாசிடம் விசாரித்தபோது முதலில் மறுத்த சுபாஷ், சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை காட்டிய பிறகு, உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து சுபாஷை போலீசார் கைது செய்தனர். சுபாஷிடம் செல்போன் குறித்து விசாரித்தபோது, தனது நண்பரிடம் உள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து, சுபாஷின் நண்பரிடம் போலீசார் விசாரித்தபோது, கேம் விளையாடத்தான் சுபாஷிடம் இருந்து செல்போன் வாங்கியதாக கூறினார்.

இதையடுத்து, செல்போன் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணம், பர்ஸ் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சுபாசைப் பொறுத்தவரை மாடிகளில் மட்டுமே திருடி வருவதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.