திருவாரூர்

ஜி.எஸ்.டி-யை எதிர்த்து ஆகஸ்டு 4-ல் தமிழகம் முழுவதும் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்தச் சங்கத்தின் மாநிக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூரில் தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சந்தியாகு தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திருச்செல்வன், மாநில அமைப்பாளர் கருப்பையன், மாவட்டச் செயலாளர்கள் முருகையன் (திருவாரூர்), மணி (நாகை), திருவாரூர் மாவட்டப் பொருளாளர் பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், “நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி.எஸ்.டி. என்ற பெயரில் ஒற்றை வரி விதிப்பு முறையை இந்தியா முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சாதாரண மக்கள், சிறு வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த வரி விதிப்பினை எதிர்த்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4–ஆம் தேதி தமிழகம் முழுவதும் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

நகர விற்பனைக் குழுவில் மூன்றில் இரண்டு பங்கு வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட விற்பனை குழுவைக் கூட்டி முடிவுகள் மேற்கொள்ள வேண்டும்.

பேரூராட்சிகளில் விற்பனைக் குழுவிற்கானத் தேர்தலை நடத்த வேண்டும்.

கிராம ஊராட்சிகளையும் இச்சட்டத்தில் சேர்க்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.