Road to cement lion vayatan debut single
குன்னூர்
குன்னூர் அருகே சிமெண்ட் நடைபாதை வேண்டும் என்று 65 வயது முதியவர் சிங்கிள் ஆளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
குன்னூர் அருகே வெலிங்டன் நல்லப்பன்தெரு இருக்கிறது. கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட இப்பகுதியில் சிமெண்டு நடைபாதை அமைக்க வேண்டும் என்று அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (65) என்பவர் குன்னூர் –ஊட்டி சாலையில் உள்ள பாய்ஸ்கம்பெனி பேருந்து நிறுத்தம் அருகே திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
முதியவர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவல் அறிந்த வெலிங்டன் காவல் ஆய்வாளர் தங்கம் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச சென்றனர்.
பின்னர், அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். இதனை ஏற்க மறுத்த அவர் உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டார். இதனால் அவரை காவலாளர்கள் வலுகட்டாயமாக கைது செய்தனர். பின்னர் அவரை வெலிங்டன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கண்டோன்மெண்ட் போர்டு துணைத் தலைவர் பாரதியார், தி.மு.க.வைச் சேர்ந்த மணி மற்றும் கவுன்சிலர்கள் காவல் நிலையம் சென்று அந்த முதியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் கூறியது:
“பொதுமக்களின் நலன் கருதி மண்சாலையாக உள்ள நடைபாதையை சிமெண்டு நடைபாதையாக மாற்ற வேண்டும் என்று கண்டோன்மெண்ட் பொறியியலாளரிடம் வலியுறுத்தினேன். ஆனால், அவர் நடைபாதை அமைக்க தடையாக உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதிகளில் நடைபெறும் மக்கள் நல மேம்பாட்டு பணிகளை தொழில்நுட்ப ஆய்வு செய்ய வேண்டும்.
கண்டோன்மெண்ட் பகுதியில் நீண்டகால குத்தகையில் குடியிருந்து வரும் வாரிசுகளின் குடியிருப்பு பகுதிகளான பாபு கிராமம், மருத்துவமனைச் சேரி, வண்டிச்சோலை போன்ற பகுதிகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட 18 அம்ச கோரிக்களை நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதுகுறித்து கண்டோன்மெண்ட் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆறுமுகத்தை காவலாளர்கள் விடுதலைச் செய்தனர்.
சிமெண்ட் நடைப்பாதை வேண்டி சிங்கிள் ஆளாக 65 வயது முதியவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் களமிறங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பூரிப்பை ஏற்படுத்தியது.
