Palani temple :பழனியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்.. காற்றில் பறந்த கொரோனா விதி- வேடிக்கை பார்க்கும் நிர்வாகம்..
பழனியில் ஐயப்ப பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சரியான விதிமுறைகளை பின்பற்றாத அரசு அதிகாரிகளால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
பழனி மலைக்கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன், முருக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பிறமாவட்ட மற்றும் மாநில பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாபாரம் செய்ய வட மாநிலத்தினர் வருகையும் அதிகரித்துள்ளது. உள்ளூர்,வெளியூர்,வெளிமாநிலம் என பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் அதிகப்படியாக பழனியில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமோ அரசின் கொரோனா விதிமுறைகளை துளி அளவு கூட பின்பற்றவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கார்த்திகை மாதம் பக்தர்களின் வருகை, குறிப்பாக ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக இருக்கும். மாவட்ட நிர்வாகமோ எந்தவித அடிப்படை சுகாதார விதிமுறைகளை கூட பின்பற்றாமல் செயல்பட்டு கொண்டு வருகின்றனர்.இதனால் ‘கொரோனா’ பெருமளவில் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனை உடனே தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, இவர்கள் பழனி அருகே உள்ள சிவகிரிப்பட்டி பைபாஸ் பகுதியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். இவர்கள் பக்தர்கள் கூட்டம் அதிகமுள்ள பழநி அடிவாரம் பகுதியில் பொம்மை மற்றும் பல்வேறு பொருட்களை விற்கின்றனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை. தடுப்பூசி செலுத்தினரா என்பதும் தெரியவில்லை.
கொரோனா மூன்றாம் அலையை எதிர்நோக்கும் இக்காலகட்டத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரங்களை சுகாதாரத்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு உடனே கட்டாயமாக செலுத்த வேண்டும் என்றும், போலீசார் இவர்களின் விவரங்கள், அடையாளங்களை சேகரித்து கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.தமிழகத்தில் முக்கிய வழிபட்டு தலமாக இருக்கும் பழனியில், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கவிட்டிருப்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே மாவட்ட நிர்வாகம் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.