Asianet News TamilAsianet News Tamil

அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லை; குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டி மக்கள் கோரிக்கை...

Rising street dogs are troublesome People request for reintroduction of family planning plans ...
Rising street dogs are troublesome People request for reintroduction of family planning plans ...
Author
First Published Nov 11, 2017, 8:16 AM IST


பெரம்பலூர்

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இப்பிரச்னைக்குத் தீர்வு காண கிடப்பில் உள்ள நாய்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட பிரதான சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் என பல்வேறு இடங்களில் 500-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. குழந்தைகள் மற்றும் மக்கள் தெருக்களை கடந்து செல்லும்போது, அங்கு சுற்றித் திரியும் நாய்கள் அவர்களை துரத்திச் சென்று அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன.

பெரம்பலூரின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகள் அருகிலும் அதிகளவில் நாய்கள் காணப்படுகின்றன. இந்த நாய்கள் சாலைகளில் ஒன்றை ஒன்று துரத்திச் செல்லும்போது மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

பல நாய்களுக்கு தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால், சாலையின் குறுக்கே கடக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. இவற்றை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோயால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து, குடும்பக் கட்டுப்பாடு செய்யும் திட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தெரு நாய்களைப் பிடித்து குடும்பக் கட்டுப்பாடு செய்து, விஷம் போக்க ஊசியும் போட்டு விடுவதற்கு நாய் ஒன்றுக்கு ரூ.444 நகராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது.

இதற்கான அறுவை அரங்கு பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் உள்ள ரெங்கா நகரில் அமைக்கப்பட்டது. அங்கு நாய்களை கொண்டுச் சென்று அறுவைச் சிகிச்சை செய்து, பின்னர் பிடித்த இடத்திலேயே விட்டு விடுவார்கள்.

மிருகவதை சட்டப்படி நாய்களை கொல்லக்கூடாது என்பதால் ஏ.பி.சி எனப்படும் விலங்கின பிறப்புக் கட்டுப்பாடு முறையில் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது. ஒரு வாரம் வைக்கப்பட்டு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட நாய்களுக்கு காதில் ஒரு அடையாளம் போட்டுப் பிடித்த இடத்திலேயே விடப்பட்டது. இதனால், நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தாததால் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. குறிப்பாக, புறநகர் பகுதிகளான வெங்கடாஜலபதி நகர், எளம்பலூர் சாலை, வடக்குமாதவி சாலை, ரோஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைகின்றன. பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் சுற்றித் திரிகின்றன. நாய்களைப் பிடித்து கருத்தடைக்குக் கொண்டுச் செல்வதற்காக நகராட்சி சார்பில் தனி வாகனம் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அந்த வாகனத்தை அதற்காக பயன்படுத்தாமல், தற்போது குப்பை அள்ளுவதற்காக மாற்றப்பட்டுவிட்டது.

அதிகாலையில் நடைப்பயிற்சி செல்பவர்கள் அச்சத்துடன் சாலையில் செல்கின்றனர். கூட்டமாக வரும் நாய்களை கண்டு பயந்து ஓடும்போது கீழே விழுந்து காயமடைகின்றனர். நாய்கள் ஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டு கொண்டு ஓடுவதால், குழந்தைகள் தெருக்களில் விளையாட முடிவதில்லை. இரவு நேரங்களில், வெளிச்சம் இல்லாத பகுதியில் செல்லும் வாகன ஓட்டுநர்களையும், மக்களையும் துரத்தி கடிக்கின்றன. இதுகுறித்து நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios