revenue ispector arrested for bribe

ஏரியில் மண் எடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

அனைத்து மாவட்டங்களிலும் வரும் பருவ மழையின் தண்ணீரை தேக்கி வைக்க குளங்கள் தூர் வாரப்படுகின்றன. இவ்வாறு எடுக்கப்படும் மண், விவசாயிகள் அரசு அனுமதியுடன் பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், குமரி மாவட்ட குளங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுட்ன் விவசாயிகள் மண் எடுக்கின்றனர். அதன்படி பொட்டல் அருகே உள்ள சம்பா குளத்தில் மண் எடுக்க விவசாயி தங்கவேல் என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அவர் குளத்து மண்ணை டிராக்டரில் அள்ளி அவரது விவசாய நிலத்துக்கு கொண்டு செல்ல பாபு என்பவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி சம்பாகுளத்தில் மண் எடுத்து தங்கவேலின் விவசாய நிலத்தில் போட்டு வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்ணை டிராக்டரில் ஏற்றிச் சென்றபோது நாகர்கோவில் வருவாய் ஆய்வாளர் ஆனந்த சதீஷ் வழிமறித்து மணல் எடுப்பதற்கான அனுமதி ரசீதை கேட்டார். அதை காட்டிய பின்பும் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என கூறினார்.

இதற்கு விவசாயி தங்கவேல் மற்றும் பாபு மறுப்பு தெரிவித்தனர். பணம் கொடுக்காவிட்டால், மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவேன் என கூறி, வருவாய் ஆய்வாளர் ஆனந்த சதீஷ் மிரட்டினார்.

இதனால், ஆத்திரமடைந்த தங்கவேல், லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி தங்கவேல், வருவாய் ஆய்வாளர் ஆனந்த சதீஷுக்கு போன் செய்தார். நீங்கள் கேட்ட பணம் தயாராகிவிட்டது. அந்த பணத்தை நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் வாங்கி கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார், கொடுத்த ரசாயனம் தடவிய பணத்துடன் அவர்கள், குறிப்பிட்ட இடத்துக்கு நேற்று சென்றனர். அந்த பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறு வேடத்தில் மறைந்து இருந்தனர்.

அப்போது, வருவாய் ஆய்வாளர் ஆனந்தசதீஷ் அங்கு சென்றார். அவரிடம் விவசாயி தங்கவேல், பாபு ஆகியோர் பணத்தை கொடுத்தனர். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நடுரோட்டில் ஆனந்தசதீஷை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். அவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளர் ஆனந்த சதீஷ், போலீசாரால் கைது செய்யப்பட்ட தகவலை தெரிவித்தனர். பின்னர் அவரை அருகில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

இதுபற்றி வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.