திருநெல்வேலி மாவட்டம், வி.எம். சத்திரம் பீர்க்கன்குளம் குளத்தைத் தூர்வாரி, புனரமைக்கும் பணி இன்று அதிகாரப்பூர்வமாகத் துவக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அமைந்துள்ள வி.எம். சத்திரத்தின் முக்கியமான நீர்நிலைகளில் ஒன்றான பீர்க்கன்குளம், நீண்டகாலமாகப் பராமரிப்பின்றி, முட்புதர்களும், குப்பைகளும் நிறைந்து காணப்பட்டது. அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய இந்தக் குளத்தை மீட்டெடுக்க, வி.எம். சத்திரம் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் முன்வந்தனர். மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, இன்று காலை 9.30 மணிக்கு புனரமைப்புப் பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.
இந்தச் சமூகப் பணியை ஊக்குவிக்கும் வகையில், நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. சுகுமார், மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் உள்பட முக்கிய அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் விழாவில் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் ஆகியோர் கொடியசைத்துப் புனரமைப்புப் பணிகளைத் துவக்கி வைத்தனர்.
குளத்தின் சீரமைப்பு குறித்து அப்பகுதி மக்களில் ஒருவரான வாசன் கூறுகையில், "இந்தக் குளம் குப்பைக் காடாகவும், கருவேல மரங்களாகவும் மாறி இருந்தது. தூர்வாரும் இந்தப் பணி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த வெள்ளத்தின்போது பல குளங்கள் உடைந்த நிலையில், எங்கள் அமைப்பு தூர்வாரிய மூர்த்தி நயினார் குளம் மட்டும் உடையவில்லை. இந்தக் குளப் பணிகள் மூலம் வெள்ளம் தடுக்கப்படும், நிலத்தடி நீர் பெருகும், சுற்றுச்சூழலும் பாதுகாப்பாகும்," என்றார்.
குளப் பணிகள் குறித்து வி.எம். சத்திரம் இளைஞர் செந்தில் பேசுகையில், "வி.எம். சத்திரத்தில் மொத்தம் ஏழு குளங்கள் உள்ளன. கடந்த ஆண்டு மூர்த்தி நாயனார் குளத்தைச் சீரமைத்தோம். இந்த ஆண்டு பீர்க்கன்குளத்தைத் தூர்வார முடிவு செய்துள்ளோம். குளத்தைச் சுற்றிலும் கரை அமைப்பது, கருவேல மரங்களை அகற்றுவது, பறவைகள் திட்டு, ரீசார்ஜ் பிட்கள் அமைப்பது, கரைகளில் மரக்கன்றுகள் நடுவது எனப் பல திட்டங்கள் உள்ளன. மக்களிடையே நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளோம். இந்தப் பணி முழுக்க முழுக்க எங்கள் அமைப்பின் சொந்த நிதியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் குளம் முடிந்ததும் அடுத்தடுத்த குளங்களையும் தூர்வாரும் திட்டம் எங்களிடம் உள்ளது," என்று தெரிவித்தார்.
இளைஞர்களின் இந்தத் தன்னலமற்ற முயற்சியும், அதற்கு அரசு நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அளித்த ஆதரவும், நீர்நிலைப் பாதுகாப்புப் பணிகளில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைந்த பங்களிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. இது நெல்லை மாவட்டத்தில் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் ஒரு முன்மாதிரி திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
