தேனி

பெரியகுளம் அரசுத் தோட்டக்கலைக் கல்லூரிக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் தாங்களும் தண்ணீர் தட்டுப்பாட்டில் தான் இருக்கிறோம் என்று வேதனை தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள அரசுத் தோட்டக்கலைக் கல்லூரியில் 4-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் இருந்தும் நீர்வரத்து இல்லாததால் மாணவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை.

மேலும் வெளியில் இருந்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்ற நிலையில் கல்லூரி நிர்வாகம், ஜெயமங்கலம் அருகே உள்ள நெடுங்குளம் கரையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை தொடங்கியது.

இதனையறிந்து அப்பகுதி மக்கள் இந்த ஆழ்துளை கிணற்றை அமைத்தால் தங்கள் பகுதியில் தண்ணீர் வற்றி விடும் எனக் கூறி ஆழ்துளைக் கிணறு அமைக்கும் வாகனத்தை முற்றுகையிட்டனர்.  இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியது:

“ஏ.புதுப்பட்டி, காமாட்சிபுரம், வேல்நகர், வடுகபட்டி பகுதிகளுக்கு இங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் எடுக்கப்படுகிறது. தற்போது வறட்சி நிலவுவதால் இங்குள்ள ஆழ்குழாயில் போதிய நீர் ஊற்று இல்லை. இந்நிலையில் மேலும் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுத்தால் எங்களுக்கு குடிநீர் கிடைக்காது. நாங்களும் குடிநீர் தட்டுப்பாட்டில் தான் இருக்கிறோம். ஆழ்துளை கிணறு அமைத்தால் எங்களுக்கு கிடைக்கும் தண்ணீர் கூட கிடைக்காது” என்றார்