சல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பாட்டம், கொம்பாட்டம் போன்றவை நடத்தியும், வெளிநாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டியும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி சல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை நகரில் மூன்றாம் நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என 4000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பாட்டம், கொம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வெளிநாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டி இளைஞர்கள் முழக்கமிட்டனர்.
இதேபோல், சல்லிபட்டி, தேவனூர்புதூர், பெதப்பம்பட்டி, சாமராயபட்டி, மலையாண்டிபட்டிணம் ஆகிய கிராமங்களிலும் வெளிநாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டி போராட்டம் நடைபெற்றது.
