ஆடம்பர கார் வேண்டாம்.. அரசு வேலை கொடுங்க.. உதவியாக இருக்கும் -பாலமேடு சிறந்த மாடு பிடி வீரர் பிரபாகர் கோரிக்கை
ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரை பணயம் வைத்து விளையாடும் சிறந்த மாடு பிடிவீரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர் பிரபாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டி- காளையை அடக்கும் காளையர்கள்
பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே, மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். தமிழர்களுடைய வீரத்தை நிரூபிக்கும் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மொத்தம் 6 ஆயிரம் காளைகள் அவிழ்த்துவிடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் ‘டோக்கன்’ வழங்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரத்திலும். நேற்று பாலமேட்டிலும் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாட 3,677 காளைகளும், 1,412 வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 10 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 781 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், 485 வீரர்கள் களம்கண்டனர்.
14 காளையை அடக்கிய பிரபாகர்
இந்தப் போட்டியில் அதிக எண்ணிக்கையில், 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகர் சிறந்த மாடுபிடி வீரர் பரிசு பெற்றார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி கார் பரிசு வழங்கினார். 11 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் அருகே சின்னப்பட்டி தமிழரசனுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. இதே போல புதுக்கோட்டை மாவட்டம் ராய வயல் பகுதியை சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் சின்ன கருப்பு காளை சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.
கார் வேண்டாம்.. அரசு வேலை கொடுங்க
பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர், கடந்த 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து நேற்றைய போட்டி தொடர்பாக அவர் கூறுகையில், உயிரை பனையம் வைத்து விளையாடுகிறோம். கார் பரிசுக்கு பதிலாக அரசு வேலை கிடைத்தால் எங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும். மற்ற விளையாட்டுகளில் வெற்றி பெற்றால் அரசு வேலை தேடி சென்று கொடுக்கப்படுகிறது. எனவே என்னைப்போன்று ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுப்பதாக கூறினார்.
இதையும் படியுங்கள்
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.. சீறும் காளைகள்.. பதுங்கி பாயும் வீரர்கள்..!