சென்னையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில், வீரதீர செயல்களில் ஈடுபட்டோருக்கு அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கி கவுரவித்தார்.
சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் ஓபிஎஸ் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஆளுநர் தவிர்த்து குடியரசு தினத்தன்று கோட்டையில் கொடியேற்றியவர் என்ற பெருமையைப் பெறுகிறார் ஓபிஎஸ்.

பின்னர் முப்படை வீரர்கள் அணிவகுப்பு, பீரங்கி, ஆயுதங்கள், போர் வாகனங்கள் மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறை அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, தமிழக போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது.
இதையடுத்து, வீரதீர செயல்களில் ஈடுபட்டோருக்கு அண்ணா பதக்கங்களை ஓபிஎஸ் வழங்கினார்.
மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம், வேளாண்துறை சிறப்பு விருது ஆகியவற்றையும் முதலமைச்சர் வழங்கினார்
வேளாண்துறை சிறப்பு விருது, புளியங்குடியைச் சேர்ந்த சங்கர நாராயணனுக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் பதக்கம்வேலூர் மாவட்டம் டாக்டர் அம இக்ரமுக்கு வழங்கப்பட்டது.
