ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கும் விஜய்?; இதுதான் காரணம்; அதிமுகவுக்கு ஆதரவா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜய் போட்டியிட விரும்பவில்லை என்று செய்திகள் உலா வருகின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மீண்டும் கவனம் ஈர்க்கும் ஈரோடு கிழக்கு
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வருகின்றன. இதற்கிடையே யாரும் எதிர்பாராதவிதமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
இதனால் அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் மே மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த தொகுதி தமிழ்நாடு அளவில் மீண்டும் கவனம் ஈர்க்கத் தொடங்கி விட்டது. ஏற்கெனவே இந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மெகா வெற்றி பெற்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ ஆனார்.
அதே போல் இந்த முறையும் தாங்கள் நின்றாலும் சரி, கூட்டணி கட்சிகள் நின்றாலும் சரி மெகா வெற்றியை பெற திமுக உறுதியாக உள்ளது. சட்டம் ஒழுங்கு, மழை வெள்ள பாதிப்புகளில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள திமுக, தங்கள் ஆட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிக்காட்ட இந்த இடைத்தேர்தலை ஒரு ஆதாரமாக பயன்படுத்த நினைக்கிறது.
விஜய்யின் திட்டம் என்ன?
மறுபக்கம் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இது முக்கியமான இடைத்தேர்தலாகும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலோ அல்லது அதிக வாக்குகளை பெற்றாலோ அது சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவுக்கு பெரும் உத்வேகமாக அமையும். இது ஒருபக்கம் இருக்க, விஜய்யின் தவெக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா? என்பதே இப்போது தமிழ்நாட்டு அரசியலின் ஹாட் டாபிக் ஆக உள்ளது.
ஆனால் இந்த இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என தகவல்கள் கூறுகின்றன. அதாவது ''நமது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான். இடைத்தேர்தல் அல்ல; ஆகவே அதை மனதில் வைத்து செயலாற்றுங்கள்'' என்று விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
இதற்கு இரண்டு காரணங்கள் பிரதானமாக உள்ளன. அதாவது விஜய், தவெக மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தியதை தவிர கட்சியில் வேறு ஏதும் செய்யவில்லை. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முதல் அடிமட்ட நிர்வாகிகள் வரை கட்சி இன்னும் முழுமையாக பலப்படுத்தப்படவில்லை. மேலும் அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வரும் விஜய்யும் மக்களை இதுவரை நேரடியாக சந்திக்கவில்லை.
அதிமுகவுக்கு ஆதரவா?
ஆகையால் அனைத்து தொகுதிகளிலும் மக்களை சந்தித்து, கட்சியையும் பலப்படுத்திவிட்டு நேரடியாக சட்டப்பேரவை தேர்தலையே விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று இரண்டாவது காரணம் மிகவும் முக்கியமானதாகும். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியிட்டு வெற்றி பெற முடியாவிட்டாலும், திமுக, அதிமுகவுக்கு சவால் அளிக்கும் வாக்குகளை பெற்று விட்டால் அது சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள பெரும் பலமாக அமைந்து விடும்.
அதே வேளையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியிட்டு மிகவும் குறைந்தளவு வாக்குகளை பெற்றால் அது மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில், மக்கள் மத்தியில் பேசும் பொருளாகி சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் மனவலிமையை இழக்கச் செய்து விடும். இதை மனதில் வைத்தும் விஜய் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.
சரி, அரசியலுக்கு வந்ததில் இருந்து இதுவரை அதிமுகவை விமர்சிக்காத விஜய், இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? என நீங்கள் கேட்கலாம். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை என்று விஜய் தெரிவித்து விட்டதாக தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர். அதிமுகவை விமர்சிக்காவிட்டாலும் அந்த கட்சி மக்களுக்கு செய்த துரோகங்களை விஜய் மறக்கவில்லை என்றும் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தவெகவை மக்கள் மத்தியில் முன்னிறுத்துவதே விஜய்யின் முதன்மையான பணி என்றும் தவெக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.