Report to the Minister of Fisheries Department has asked Sri Lankan Navy Commander - Sri Lanka Parliamentarian info
தமிழக மீனவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் அந்நாட்டு கடற்படை தளபதியிடம் அறிக்கை கேட்டுள்ளார் என, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்களை மத்திய மாநில அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். அதன் வரிசையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இன்று தங்கச்சிமடம் சென்று பிரிட்ஜோவின் தாயாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதையடுத்து நிர்மலா சீதாராமன் மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்திய மீனவரை சுட்டுக் கொன்றவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். ஆனால் அதற்கு போராட்டகுழுவினர் மறுப்பு தெரிவித்தனர். மேலும் நாளையும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க, சட்டரீதியான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் தமிழக மீனவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் அந்நாட்டு கடற்படை தளபதியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
