Asianet News TamilAsianet News Tamil

20 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்படும் சாலை; பெரும் போராட்டத்திற்கு கிடைத்த பரிசு…

Renewed road after 20 years The prize for the great struggle
renewed road-after-20-years-the-prize-for-the-great-str
Author
First Published Apr 27, 2017, 8:15 AM IST


நீலகிரி

பிரிவு – 17 நிலப் பிரச்சினையால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்கப்படாமல் இருந்த சாலை, மக்களின் போராட்டத்திற்கு பிறகு புதுப்பிக்கப்படுகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா பகுதியில் முடிவு செய்யப்பட்டாத பிரிவு – 17 நிலம் உள்ளன.

இவ்வகை நிலத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிப் பகுதியில் பல ஆண்டுகளாக வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பேரூராட்சி பகுதியில் செல்லும் சாலைகளை புதுப்பிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்தது.

அவ்வளவு ஏன்? அரசு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடங்கள் கூட கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் பிரிவு – 17 நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு மின்சாரம், நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.

இதனால் சினம் கொண்ட மக்கள், மோசமாக கிடக்கும் சாலைகளை புதுப்பிக்க வேண்டும் என பேரூராட்சி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சாலையை புதுப்பிக்க அனுமதி அளித்தது.

மாவட்ட நிர்வாகம் ஒப்புதலின் பேரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் சூண்டி பகுதியில் இருந்து ஆரோட்டுப்பாறை வரை 4 கி.மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.

மேடு, பள்ளங்கள் கொண்ட பகுதியை பொக்லைன் எந்திரம் கொண்டு நிலத்தை சமப்படுத்தி சாலை அமைக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து சூண்டி, ஆரோட்டுப்பாறை பகுதி கிராம மக்கள் கூறியது:

“பிரிவு – 17 நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளதால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை புதுப்பிக்கவில்லை. குண்டும், குழியுமான சாலையால் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டது.

அத்தியாவசிய தேவைகளுக்காக கூடலூருக்குச் இந்த குண்டும் குழியுமான சாலையில் சென்று வருவதால் உடல் அசதி ஏற்பட்டு வந்தது. தற்போது தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது” என்று கூறினர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios