விருதுநகர்,

சல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்களை காவலாளர்கள் வலுகட்டாயமாக அப்புறப்படுத்திய போதிலும், மீண்டும் போராட்டக் களத்திற்கே வந்து மாணவர்கள், இளைஞர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

சல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரி விருதுநகர் மாவட்டம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு சல்லிக்கட்டிற்கான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டத்தை பிறப்பித்து அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது.

சல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றுமாவட்டம் முழுவதும் 20 இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்று காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை மறுத்த போராட்டக்காரர்களை காவலதுறையினர் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்த போராட்டக் களத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் இருந்தபோதிலும் அவர்களிடம் காவலாளர்கள் கடினமாக நடந்து கொண்டனர்.

சல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை மாணவர்கள் எழுப்பியவாறு ஒருவரை ஒருவர் மனித சங்கிலிபோல் பிடித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் கூட அவர்களை பிடித்து இழுத்தும், கால்களை பிடித்து தூக்கியும் காவலாளர்கள் அப்புறப்படுத்தினர்.

ஆனால், சிறிது நேரம் கழித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீண்டும் போராட்டம் நடத்திய இடத்திற்கும், மற்றும் அதன் அருகில் இருக்கும் இடத்திற்கும் வந்து அமர்ந்து சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்றும், பீட்டாவை தடைச் செய்ய வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்புகின்றனர். இதனால், காவலாளர்கள் என்னசெய்வது என்று தெரியாமல் திணறினர்.