Remove our village from the new taluk Nine villagers are requested to help the helpline

தூத்துக்குடி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதிய தாலுகாவான கயத்தாற்றில் இணைக்கப்பட்ட தங்களது கிராமங்களை நீக்கும்படி ஒன்பது கிராம மக்கள் கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறை தலைமை இடமாக் கொண்டு புதிய தாலுகா அமைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி தாலுகாவில் இருந்த கயத்தாறு யூனியனில் உள்ள கிராமங்களை ஒருங்கிணைத்து இந்த புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி, குருவிநத்தம், அச்சங்குளம், முடுக்கலாங்குளம் ஆகிய நான்கு கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 9 கிராமங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

காமநாயக்கன்பட்டியில் இருந்து கோவில்பட்டி 15 கிலோ மீட்டர் தொலைவிலும், கயத்தாறு 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மேலும் காமநாயக்கன்பட்டியில் இருந்து கயத்தாறுக்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால் பசுவந்தனை, கடம்பூர் வழியாக மூன்று பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும்.

எனவே, இந்த நான்கு பஞ்சாயத்துகளைச் சேர்ந்த ஒன்பது கிராமங்களும் கோவில்பட்டி தாலுகாவிலேயே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் கோவில்பட்டி தாலுகாவிலேயே தங்களுடைய கிராமங்கள் தொடர வலியுறுத்தி, காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.

பின்னர், இந்த ஒன்பது கிராம மக்களும் திரண்டுச் சென்று கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தையொட்டி உதவி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல் ஆய்வாளர்கள் ராஜேஷ் (கோவில்பட்டி மேற்கு), பௌல்ராஜ் (கிழக்கு), ஜூடி (நாலாட்டின்புத்தூர்), செல்லாபாய் (அனைத்து மகளிர்) ஆகியோர் தலைமையில் ஏராளமான காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

பின்னர் கிராம மக்கள் தரப்பில் பிரதிநிதிகள், உதவி ஆட்சியர் அனிதாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவப் பெற்றுக் கொண்ட அவர், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

ஆனாலும், இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை தொடர்ந்த பல்வேறுப் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.