- Home
- Career
- TNHRCE Job: 757 கோவில்களில் அறங்காவலர் பணி! அறநிலையத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
TNHRCE Job: 757 கோவில்களில் அறங்காவலர் பணி! அறநிலையத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
Temples: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, சட்டப்பிரிவு 46(1) மற்றும் 46(2) கீழ் உள்ள 757 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை என்பது தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற இந்துக் கோவில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகிப்பதற்கும், அவற்றின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் இந்தத் துறை உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 44,000-க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் மற்றும் சமணக் கோவில்கள் இந்த துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.
இந்நிலையில் அவ்வப்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உள்ள காலியான பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 46 (1) ன் கீழ் உள்ள 673 திருக்கோயில்களுக்கும் மற்றும் 46(2) ல் உள்ள 84 திருக்கோயில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
அறங்காவலர் நியமன அறிவிப்பு, திருக்கோயில்கள் விவரம், தகுதிகள் விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணைய வழியில் (online) பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்.
மேலும் ஆகஸ்ட் 12ம் தேதி மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே, சட்டப்பிரிவு 46(3)ன் கீழ் உள்ள 220 திருக்கோயில்களுக்கும். நிர்வாகத்திட்டம் உள்ள 35 திருக்கோயில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் மற்றும் 14 மாவட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினர்களின் நியமனத்திற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

