புதிய கல்விக்கொள்கை வரைவு முன்மொழிவில் உள்ள குறைபாடுகளை நீக்கிட கோரி திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தபப்ட்டது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு “மத்திய அரசின் 6-வது ஊதியக்குழு ஊதியத்தில் இடைநிலை ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை நீக்கி சரி செய்திட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு முன்மொழிவில் உள்ள குறைபாடுகளை நீக்கிட வேண்டும். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 7-வது ஊதியக்குழு ஊதியத்தை தமிழகத்தில் உடனே அமல்படுத்த ஊதியக்குழு அமைத்திட வேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 10 இடங்களில், அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை அன்று நடத்தப்பட்டது.

அதன்படி திருவாரூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் வேதமூர்த்தி தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை செயலாளர் வடுகநாதன் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார்.

இதில் நிர்வாகிகன் ஐயப்பன், ராஜசேகர், சேவியர் ரேமண்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல கொரடாச்சேரி உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பும், நன்னிலம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பும், மன்னார்குடி உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.