Release real number of dead in thoothukudi shootout - Emphasis on government ...

திண்டுக்கல்

துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் நடைபெற்ற காவலாளர்களின் துப்பாக்கி சூட்டால் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையம் அருகே நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஆண்டிச்சாமி தலைமை தாங்கினார். தலைவர் ஹக்கீம் சேக் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். 

துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளியிட வேண்டும்" போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைசெயலாளர் ஆனந்தகுமார், பொருளாளர் ஜேசுதாஸ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.