அரியலூர் அருகே சொத்தை அபகரித்துக் கொலை மிரட்டல் விடுத்த உறவினரைக் கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
செந்துறை அருகேயுள்ள பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் பசுபதி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (50). வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த இவர், தனது கணவரின் சகோதரர்கள், எங்களுடைய சொத்துகளை அபகரித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், இதுகுறித்து செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை மீட்டு, அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.
பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினரின் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
