Registration must be submitted in Aathinam property details! Court order
ஆதீன மடங்களின் தலைவர்களும், ஆதீனங்களின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் குறித்தும் பதிவுத்துறை தலைவரிடம் சர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஆதீனத்துக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, தமிழகம் முழுவதும் இதுபோன்ற ஆதீன மடங்களுக்கு சொந்தமான 55,820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. ஆதீன மடங்களில் போதிய வருமானம் இல்லாததால் நித்யகால பூஜைகள் நடைபெறவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களின் தலைவர்களும், ஆதீன சொத்துக்கள் குறித்த விவரங்களை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கவும், பதிவுத்துறை தலைவர் அதனை உறுதி செய்யவும் உத்தரவிட்டனர்.
இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆதீன சொத்துக்கள் குறித்த தணிக்கை கடைசியாக எப்போது நடந்தது என்பது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பான விசாரணையை இம்மாதம் 20 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
