நாமக்கல்

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட ‘கைவிரல் ரேகை பதிவு எந்திரம்’ கூடுதல் தொகைக்கு விநியோகிக்கப்பட்டு இலட்சக்கணக்கில் மோசடி நடந்து இருப்பதாக கூறி எந்திரங்களை திரும்ப ஒப்படைக்க தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பொது சேவை மையம் உள்ள 91 சங்கங்களுக்கு அரசு சார்பில் ‘கைவிரல் ரேகை பதிவு எந்திரம்’ (பயோ மெட்ரிக் டிவைஸ்) வழங்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட கடன் சங்க செயலாளர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திரண்டனர்.

சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பொது சேவை மைய பயன்பாட்டிற்கு மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் ‘கைவிரல் ரேகை பதிவு எந்திரம்’ தேவையற்ற சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடக்கவிலை ரூ.3400 என அதன் அட்டை பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரூ.6 ஆயிரம் வரை விலை நிர்ணயித்து காசோலை பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.1½ கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதனை திரும்ப பெற வேண்டும். புதிய நவீன மயமாக்குதல் என்ற பெயரில் சங்க நிதியை மோசடி செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிகிறது. எனவே இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.