பெரம்பலூர்

விதை, உரம், பூச்சிமருந்துக்கான ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க வேண்டும் என்று விவசாய ஈடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க ஆறாவது பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயலாளர் சத்தியமூர்த்தி, மாநிலப் பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவர் மோகன் பங்கேற்றுப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், “விவசாயிகளுக்கான பயிர்காப்பீட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்தி விரைவில் நிவாரண தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்த முழுமையான விளக்கத்தினை மத்திய, மாநில அரசுகள் தெளிவுப்படுத்த வேண்டும்.

விதை, உரம், பூச்சிமருந்து ஆகியவற்றிற்கான ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயிகளின் நலன்கருதி மானிய விலையில் விதை, உரம், பூச்சிமருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்டப் பொருளாளர் ஜெயபிரகாஷ், மாவட்டச் சாசனத் தலைவர் வேணுகோபால் உள்பட நிர்வாகிகள் மற்றும் விவசாய இடுபொருள் வியாபாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் மாவட்டத் துணைத் தலைவர் ஐயம்பெருமாள் நன்றித் தெரிவித்தார்.