ration shop was closed again cause of two councilors fight
திருச்சி
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட ரேசன் கடை முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் மோதலால் மீண்டும் மூடப்பட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சொக்கலிங்கபுரத்தில் புதிதாக ரேசன் கடை கட்டப்பட்டுள்ளது. இந்த கடை கடந்த 2006 - 2007-ஆம் ஆண்டு அப்போதைய எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டது. அதன்பின்பு அந்த ரேசன் கடை திறக்கப்படாமலேயே இருந்தது.
அந்த ரேசன் கடையை திறந்து பொருட்கள் விநியோகிக்க வேண்டும், அப்பகுதி பொதுமக்களின் கார்டுகளை அந்த கடையுடன் இணைக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கோரிக்கை விடுத்து, பல்வேறு போராட்டங்களும் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த ரேசன் கடையை திறக்க வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் வந்தனர்.
அப்போது மாநகராட்சி 39-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் கதிரவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கதிரவன் மதிமுகவில் இருந்து விலகியவர்.
அந்த கடையில் கூடுதலாக அட்டைகளை இணைக்காமல் கடையை திறக்க கூடாது என திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதற்கிடையில் 40-வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், தி.மு.க.வை சேர்ந்த முத்துசெல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் வந்தனர்.
ஒரு தரப்பினர் கடையைத் திறக்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் கடையை திறக்க கூடாது எனவும் கூறியதால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிற்று.
இதற்கிடையில் ரேசன் கடையை ரிப்பன் வெட்டி முன்னாள் கவுன்சிலர் கதிரவன் திறந்து வைத்தார். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் முன்னாள் கவுன்சிலர் கதிரவனின் தம்பி அறிவழகனை எதிர்தரப்பினர் தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் காவலாளர்கள் விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர்.
காயமடைந்த அறிவழகன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் தாக்குதல் நடத்திய தி.மு.க. நிர்வாகிகள் முத்துசெல்வம், ராஜகோபால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இதனையடுத்து இரு தரப்பினரின் மோதல் காரணமாக, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ரேசன் கடையை அதிகாரிகள் மீண்டும் மூடினர்.
இரண்டு கட்சிகாரர்கள் சண்டையிட்டு திறக்கப்பட்ட ரேசன் கடையை மீண்டு முடியதால் அப்பகுதி பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
