கோழிப்பண்ணையில் கோழிக் குஞ்சுகள் மிகவும் கொடுமைப் படுத்தப்படுகின்றன, அதிலும், முட்டையிடாத சேவல் குஞ்சுகள் மீது கொடூர செயல்கள் இழைக்கப்படுகிறது என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா புகார் தெரிவித்துள்ளது.

பீட்டா அமைப்பு

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றது பீட்டா அமைப்பு.

அதன்பின், தமிழகத்தில் நடந்த போராட்டத்தால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசரச்சட்டம் இயற்றப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன.

கர்நாடக மாநிலத்தில் நடக்கும் கம்பளா என்ற எருமை மாட்டுப் பந்தயத்துக்கும் பீட்டா அமைப்பு தடை பெற்று, அது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

புகார்

இந்நிலையில் தெலங்கானா, ஆந்திர பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்மையில், கோழிக்குஞ்சுகள் கொடுமைப்படுத்தப்படுவதாக, பீட்டா அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு பீட்டா அமைப்பு விசாரணை நடத்தி, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.

கோழிகளுக்கு கொடுமை

இது குறித்து பீட்டா அமைப்பின் அதிகாரி நிகுஞ் சர்மா ஜதராபாதில் நேற்று கூறுகையில், “ ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள ஏராளமான கோழிப் பண்ணைகளில் உள்ள ஆண் கோழிக்குஞ்சுகளுக்கு பல கொடுமைகள் நடக்கின்றன.

நிறுவனங்கள்

முட்டை உற்பத்திக்கு தகுதியில்லாத ஆண் கோழிக்குஞ்சுகள், மற்ற குறைகள் உள்ள கோழிக்குஞ்சுகள் உயிருடன் புதைக்கப்படுகின்றன, நசுக்கப்படுகின்றன, எரிக்கப்பட்டு, குப்பையில் வீசப்படுகின்றன. முன்னணி கோழிக்கறி, முட்டை நிறுவனங்களும் இந்த செயல்களில் ஈடுபடுகின்றன.

கடிதம்

இது தொடர்பாக தெலங்கானா அரசுக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் நாங்கள் புகார் அளித்து இருக்கிறோம், மேலும், எங்களின் கவலைகளை அந்த குறிப்பிட்ட நிறுவனங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவிக்க இருக்கிறோம்.

தடுக்க வேண்டும்

இது போன்ற கொடூர செயல்கள் வெளிநாடுகளில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. கோழிக் குஞ்சுகளை கொடுமைப்படுத்துவது என்பது சட்டத்துக்கு விரோதமானது.

இந்த விசயத்தை சைவ உணவு பழக்கம் கொண்ட மக்களும், அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் மூலம், முட்டையில் உள்ள குஞ்சுகள்பெட்டோக் கோழிகளா, அல்லது சேவல்களா என்பதை கண்டுபிடித்து, இப்படி கொலை செய்வதை தடுக்க வேண்டும்.

வேண்டுகோள்

மேலும், உடல்நலம் இல்லாத, முட்டையிட தகுதியில்லாத கோழிக்குஞ்சுகளுக்கு மயக்கமருந்து கொடுத்து அதை உயிர்நீக்கம் செய்ய வேண்டும்.மாறாக கொடூரமாக கொலைசெய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.