வரிக்கு மேல் வரி.. மக்களை கரும்புச்சாறு பிழிவதை போல் கசக்கி சக்கையாக அரசு தூக்கி எரிகிறது-சீறும் R.B.உதயகுமார்
காவல்துறை அதிகாரி வீட்டில் நகையும், பணத்தையும் கொள்ளையடித்துள்ளார்கள் என்று சொன்னால் சாமானிய மக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறு வடிவம் இபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தாய்மார்களின் தியாகத்தை போற்றுகின்ற வகையிலே அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது அன்னையர் தினம் என்றால் எல்லோருக்கும் புரட்சிதலைவி அம்மாதான் நினைவிற்கு வருவார்கள். இன்றைக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறு வடிவமாக இன்று பிறந்த விழா காணும் எடப்பாடியாரை நாம் பார்க்கின்றோம். இன்றைக்கு பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே, அதிமுகவை கண் இமை காப்பது போல் கட்டி காத்து எதிரிகளிடமிருந்தும், துரோகிகளிடமிருந்தும் பாதுகாத்து மீட்டெடுத்து இருக்கின்றார்.
வரிக்கு மேல் வரி
மின்சார கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று சொன்ன திமுக ஆட்சி அமைத்தவுடன் மின்சார கட்டணத்தை உயர்த்தினார்கள், அதேபோன்று சொத்து வரி உயர்த்தினார்கள், குப்பை வரி உயர்த்தினார்கள், சாக்கடை வரி உயர்த்தினார்கள்.இப்போது கூட பத்திரப் பதிவில் வழிகாட்டுதல் மதிப்பு 70 சதவீதம் உயர்த்த போவதாக ஒரு செய்தி வருகிறது. மக்களை கரும்புச்சாறு பிழிவதை போன்று கசக்கி எடுத்து சக்கையாக அரசு தூக்கி எரிகிறது.
நாடு பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல வறட்சி, கோடை மழை என்று ஒரு புறத்தில் தண்ணீர் பற்றாக்குறை ,ஒரு புறத்திலே இன்னைக்கு கோடை மழை எதிர் கொள்ள வேண்டிய இந்த நிர்வாகத்தை மேற்கொண்டு அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டியவர்கள் இன்னைக்கு நாடு கடந்து கடல் கடந்து ,அவர்கள் செல்வதை பார்க்கிறபோது இந்த மக்கள் மீது அவர்கள் வைத்திருக்கிற அக்கறையின் அளவு நமக்குத் தெரிகிறது. கடலை தாண்டி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளவர்கள் மக்கள் மீது எப்படி அக்கறை கொண்டு இருப்பார்கள் என்பது இதுவே சாட்சி.
தமிழகத்தை தலை நிமிர செய்வோம்
நாணயத்தின் இரு பக்கங்களாக ஆளுங்கட்சி ,எதிர்க்கட்சி இருக்க வேண்டும் இரண்டு பக்கம் தண்டவாளம் நன்றாக இருந்தால் தான்,ரயில் பயணம் பாதுகாப்பாக ஆகும் சுமுகமாகவும் செய்யக்கூடிய ஒரு நிலை ஏற்படும். எடப்பாடியார் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற தியாக வேள்வியில் நாம் அனைவரும் அவருடைய கரத்தை வலுப்படுத்த, அவர் வழி நடப்போம். இன்றைக்கு தலை தாழ்ந்திருக்கிற தமிழகத்தை தலை நிமிர செய்வோம்.
இந்தியாவிலேயே தமிழகம் கடன் வாங்குவதிலே முதலிடம், தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மதுபானவிலையில் கொள்ளை அடிப்பதிலேயே தமிழகம் முதலிடம். காவல்துறை அதிகாரி இல்லத்திலேயே நகையும் பணத்தையும் கொள்ளையடித்து இருக்கிறார்கள் கோடிக்கு மேல சேர்த்து வைத்த பணத்தை காவல்துறை அதிகாரியே இன்றைக்கு பறிகொடுத்து இருக்கிறார் என்று சொன்னால் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு எங்கே இருக்கிறது.