தமிழ்நாட்டு முதல்வருடன் கலந்தாலோசித்து வேறு ஒரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்

விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் ஆகியோர் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டபேரவை அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், “புதுவையில் குடிபெயர்ந்த பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. குரூப் சி மற்றும் டி பணிகளில் வேலை, பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. உயர்கல்வியில் இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. புதுவை அரசு வெளியிட்ட 2 அரசாணைகள் பூர்வீகமாக உள்ளவர்களுக்கு மட்டுமே இடஒதக்கீடு என கூறுகிறது. இந்த அரசாணை தவறு என சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் காலம் கடத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே புதுவையில் வாழும் அனைத்து பட்டியலின மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரவிக்குமார் எம்.பி., “நீட் தேர்வு சம்பந்தமான கோப்பு ஆளுநரிடம் இல்லாத பொழுது அதில் கையெழுத்திட முடியாது என்று அவர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.” என்றார்.

சுதந்திர தினம்: ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

நீட் தேர்வால் மாணவரும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டது குறித்து பேசிய ரவிக்குமார் எம்.பி., “நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு மத்திய அரசும் மாநில ஆளுநருமே பொறுப்பேற்க வேண்டும். திறமையான மாணவர்களுக்கு நீட் வாய்ப்பளிக்கிறது என்பது அப்பட்டமான பொய். பணக்கார மாணவர்கள் மட்டுமே நீர் தேர்வு வாய்ப்பளிக்கிறது. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. இன்னும் உயிர்கள் போகாமல் தடுக்க வேண்டும் என்றால் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

அந்தந்த மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்து ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என பாஜகவினரே தங்களுடைய நிலைப்பாட்டை கூறியுள்ளனர். இதுகுறித்து அன்றைய ஒன்றிய அரசுக்கு எழுத்துப்பூர்வமாகவே கொடுத்துள்ளனர். எனவே, அவர்கள் கூறியது போல, மாநில முதல்வரிடம் ஆலோசனை செய்து தமிழ்நாட்டுக்கு வேறு ஒரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்றும் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.