குடும்ப அட்டைகளின் பயன்பாடு மேலும் ஓராண்டு நீட்டிப்பு… உள்தாள் ஒட்டும் பணி தொடக்கம்…

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில், குடும்ப அட்டைகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கச் செய்யும் வகையில் அவற்றில் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கப்பட்டள்ளது. 

தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டம் மூலம், அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த குடும்ப அட்டைகளின் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்தவுடன், மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

தற்போது குடும்ப அட்டைகளின் பயன்பாட்டுக்காலம் முடிவடைந்திருப்பதால், அவற்றை மேலும் நீட்டிக்க வசதியாக அவற்றில் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கியுள்ளது.

அந்தந்த நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்காக சென்னையில் மட்டும் சுமார் 23 லட்சம் உள்தாள்கள் ரேஷன் கடைகளுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரேஷன் கடையிலும், நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் 100 குடும்ப அட்டைகள் உள்தாள் இணைப்புப் பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.