மாணவி அனிதாவுக்கு நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் அமீர் - பா.ரஞ்சித் இருவருக்கிடையேயும் கடும் கருத்து மோதல் எழுந்தது. இதனால் அஞ்சலி நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாணவி அனிதா, மருத்துவ படிப்பில் சேர இயலாததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்புக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திரைப்பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் சார்பில், உயிரிழந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழாவில் இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித், ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சென்னை, வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இந்த அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது பேசிய இயக்குநர் அமீர், நாம் அனைவரும் இங்கு அனிதாவுக்காக கூடியிருக்கிறோம். சாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் தமிழனாக சமத்துவம் அடைந்துள்ளோம் என்று கூறினார்.

இயக்குநர் அமீரின் இந்த பேச்சுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் மேடைக்கு வந்த இயக்குநர் பா.ரஞ்சித், அமீருடன் கருத்து மோதலில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய பா.ரஞ்சித், இங்கு ஒரு வீதியில் பல ஜாதி உண்டு; ஜாதியை ஒழித்தால் மட்டுமே சமத்துவம் ஏற்படும். இன்னும் எத்தனை நாட்கள் சமூக நீதியற்ற சமூகமாக இருக்கப்போகிறோம்? தமழனாக இருந்து நாள் சொல்கிறேன், தமிழ்த்தேசியம் எட்டாக்கனிதான். சாதியாக பிரிந்திருக்கும் வரை உன்னால் தமிழ்த்தேசியத்தை தொட முடியாது என்று கூறினார்.

அமீர் - பா.ரஞ்சித்-க்கு இடையே ஏற்பட்ட இந்த கருத்து மோதலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.