தமிழக தேர்தல் களத்தில் என்ஆர் காங்கிரஸ் கட்சி போட்டி.! காரணம் என்ன.? ரங்கசாமி விளக்கம்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட தயாராகி வருகிறது. வேலூரில் 200க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்த நிலையில், 2026 தேர்தலில் கூட்டணி குறித்து விஜய் உடன் பேச உள்ளதாக ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வரும் கட்சி என்.ஆர். காங்கிரஸ், அதன் தலைவர் ரங்கசாமி, முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பாக புதுச்சேரியில் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் தேசிய தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக அக்கட்சிக்கு போட்டியாக என்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். எளிய முதலமைச்சராக அறியப்பட்ட ரங்கசாமியை புதுச்சேரி மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதற்கு பயனாக புதுச்சேரியில் தொடர்ந்து அக்கட்சி வெற்றி பெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக தமிழகத்தின் மீது தனது பார்வையை ரங்கசாமி திருப்பியுள்ளார்.
அந்த வகையில் தமிழகத்தில் திமுக- அதிமுக கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அதன் படி, தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளா். இதன் முதல் கட்டமாக, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். அக்கட்சியின் நிறுவன தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி முன்னிலையில் திலாஸ்பேட்டை பகுதியில் இணைப்பு விழா நடைபெற்றது. கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சி தூண்டை அணிவித்து முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமியிடம், திடீரென என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைவது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், புதுவையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கும் போது தமிழகத்திலும் கட்சித் தொண்டர்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பது எனக்கு ஒரு எண்ணமாக இருந்தாக கூறினார். மேலும் அந்த நேரத்தில் நிறைய பேர் வந்து தமிழகத்தில் கட்சி துவக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார்கள். ஆனால் அந்த நேரம் அதற்கு நான் பதில் எதுவும் சொல்லாமல் புதுச்சேரியில் கட்சி தொடங்கி போட்டியிட்டு ஆட்சி அமைத்தோம் என கூறினார்.
இதனை தொடர்ந்து சில மக்கள் தமிழகத்திற்கு எப்போது வருவீர்கள் என்று என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதனால் அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் சார்பில் 2026 ஆம் ஆண்டு தமிழகத்திலும் போட்டியிடலாம் என முடிவு செய்து கட்சி ஆண்டு விழாவில் இது குறித்து அறிவதித்தாக கூறினார். இதனையடுத்து தான் வேலூரில் இருந்து தொண்டர்கள் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இன்னும் தமிழக பல்வேறு மாவட்டங்களில் இருந்து என். ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
தவெக கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, நடிகர் விஜய் என் நண்பர், எனக்கு வேண்டியவர். அவரிடம் பேசுவன், கூட்டணி குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை, தேர்தல் சமயத்தில் சூழல் எப்படி அமைகிறதோ அப்போது தமிழகத்தில் கூட்டணி யாருடன் என்பது பற்றி அலோசிக்கப்படும் என தெரிவித்தார்,