மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார். வருமான வரித்துறையினர் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன் தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் பணமும், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைதொடர்ந்து அவரிடம் விசாரித்து வந்தனர்.

நேற்று முன்தினம் அதிகாலையில் ராமமோகன் ராவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில பரிசோதனைகள் முடிந்து தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். 2–வது நாளாக நேற்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ராமமோகன் ராவ் மற்றும் அவருடைய மகன் விவேக் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக இருவருக்கும், வருமானவரித்துறையினர் ‘சம்மன்’ அனுப்பினர்.

சம்மனை பெற்றுக்கொண்ட ராமமோகன் ராவ், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அதேபோல் அவருடைய மகன் விவேக்கும் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை.

இதனால் ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அவரை அங்கு கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கிடையில் மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு ராமமோகன் ராவ் இன்று வீடு திரும்புகிறார்.

ராமமோகன் ராவ், சென்னை அண்ணாநகர், ஒய் பிளாக், 6வது மெயின்ரோடு, 1வது தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பிய பிறகு வருமானவரித்துறையினர், அவரிடம் எப்போது வேண்டுமானாலும் விசாரணையை தொடங்கலாம். அவருடைய வீடு அல்லது ஏதாவது ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.