rameshwaram fishermen protest against srilanka

எல்லை தாண்டினால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளதற்கு, ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் 14ம் தேதி தபால் நிலையங்கள் முன்பு தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள். மேலும், அவர்களது படகுகள், வலைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. சில நேரங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், இதுவரை 600 மீனவர்கள் இறந்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக அரசியல் கட்சியினர் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக மீனவர்கள், தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன், இலங்கை நாடாளுமன்றத்தில் கடல் தடுப்பு அவசர சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில், எல்லை தாண்டி மீன் பிடித்தால், 2 ஆண்டு சிறை ரூ.2 முதல் ரூ.20 கோடி வரை அபராதம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இலங்கை அரசின் புதிய சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள அவர்கள், அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு வரும் 14ம் தேதி தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.