தமிழத்தில் வேகமாக பரவி வரும் மர்மக்காய்ச்சலால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு.! தமிழக அரசை அலர்ட் செய்யும் ராமதாஸ்
தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் மர்மக்காய்ச்சலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காய்ச்சலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மர்ம காய்ச்சலால் மக்கள் பாதிப்பு
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வகையான மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. மர்மக் காய்ச்சலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,
மற்ற மாவட்டங்களுக்கும் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால், மர்மக்காய்ச்சல் குறித்து மக்களிடம் எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டுவதும், மாலை நேரங்களில் மழை பெய்வதுமான மாறுபட்ட காலநிலை தான் மர்மக் காய்ச்சலுக்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மர்ம காய்ச்சலுக்கு பாதிப்பு என்ன.?
மர்மக் காய்ச்சலை நினைத்து அச்சமடையத் தேவையில்லை; அதே நேரத்தில் அலட்சியம் கூடாது என்று எச்சரித்துள்ள மருத்துவர்கள், தாங்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை உட்கொண்டால் மூன்று முதல் 5 நாட்களில் காய்ச்சல் குணமடைந்து விடும் என்று கூறியிருக்கின்றனர். இந்த செய்தியை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தொடக்க நலவாழ்வு மையங்களில் மருத்துவம் பெறுவதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் அளவுக்கு அதிகமாக குவியும் நிலையில், அவர்களுக்கு மருத்துவம் அளிக்க போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்களும், பிற மருத்துவ பணியாளர்களும் இல்லை.
மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை
புறநோயாளிகளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க அதிக காலம் ஆவதால் மற்ற நோயர்களுக்கு மருத்துவர் அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் குறித்து மக்களிடம் ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அனைத்து கிராமங்களிலும் அதிக எண்ணிக்கையில் மருத்துவ முகாம்களை நடத்தி, மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்