மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த இம்மாநாட்டில் மதுவிலக்கு, வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பெண்களின் உரிமைகளையும் சமூக மேம்பாட்டையும் வலியுறுத்தி 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுவிலக்கு மற்றும் வேலைவாய்ப்பு:

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பெண்கள் பாதுகாப்பு:

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட தீர்மானம், இத்தகைய குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. மேலும், பெண்கள் பணிபுரியும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் பெண் காவலர்களை நியமித்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டது.

கல்வி மற்றும் மருத்துவம்:

நீட் தேர்வின்போது மாணவிகள் மனரீதியாக துன்புறுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் மகளிர் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும். ஏழை மற்றும் நடுத்தரப் பெண்களுக்கு அதிகரித்து வரும் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சமூக நீதி:

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

விவசாயிகள் மற்றும் மீனவர்கள்:

காவிரி பாசன மாவட்டங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். வறுமையில் வாடும் மீனவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்மானங்கள் தெரிவித்தன.

இந்த மாநாட்டில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார். அதைத் தொடர்ந்து, மற்ற பெண் நிர்வாகிகள் பல்வேறு தீர்மானங்களை வாசித்தனர். கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.