Asianet News TamilAsianet News Tamil

பாமக மூத்த நிர்வாகி இசக்கி காலமானார்: ராமதாஸ் வேதனை!

பாமக தலைமை நிலைய மூத்த நிர்வாகி இசக்கி உடல்நலக்குறைவால் காலமானார்

Ramadoss condolence for pmk senior leader isakki demise smp
Author
First Published Oct 27, 2023, 11:00 AM IST

பாமக தலைமை நிலையச் செயலாளரும், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுடன் இணைந்து சுமார் 45 ஆண்டுகள் பயணித்தவருமான இசக்கி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு பாமக நிறுவனர் ராமதாசை கடுமையான வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், எனது குறிப்பறிந்து கட்சிப் பணிகளை ஆற்றி வந்தவருமான இசக்கி படையாட்சி உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர் மறைந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர், வன்னியர் சங்கத்தின் முதன்மை நிர்வாகிகளில் ஒருவர் என்பதையெல்லாம் கடந்து எனது 45 ஆண்டு கால நண்பர் என்பது தான் எனக்கும், இசக்கி படையாட்சிக்கும் இடையிலான உறவை குறிப்பதற்கு சரியானதாக இருக்கும். அவரும் நானும் அறிமுகமாகும் போது வன்னியர் சங்கமும் தொடங்கப்படவில்லை; பாட்டாளி மக்கள் கட்சியும் தொடங்கப்படவில்லை. 1977-ஆம் ஆண்டில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ட்ரிப்பிள் எஸ் என்றழைக்கப் படும் சமூக சேவை சங்கக் கூட்டத்தில் சந்தித்தப்போது எனக்கு அறிமுகமான இசக்கி படையாட்சி அதன்பின் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றில் எந்த எதிர்பார்ப்புமின்றி பணியாற்றினார்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அவர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் கட்சியை வளர்ப்பதற்காக கடுமையாக உழைத்தவர். 1989, 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் என்னுடன் இணைந்து முக்கியப் பங்காற்றியவர். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் தங்கி கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பவர்.

தமிழ்நாட்டில் எனக்கு அடுத்தபடியாக அவர் போகாத கிராமங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஏராளமான கிராமங்களுக்கு சென்று கட்சிப் பணியாற்றுபவர். கட்சிப் பணிகளை நிறைவேற்றித் தருவதில் எனக்குத் தளபதிகளாக விளங்கும் சிலரில் இசக்கிப் படையாட்சி முக்கியமானவர். பா.ம.க. தொண்டர்கள் அனைவருடனும் அன்புடன் பழகியவர்.

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு; திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

எப்போதும் துடிப்புடன் பணியாற்றி வரும் இசக்கி படையாட்சி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது மிகவும் தாமதமாகத் தான் தெரியவந்தது. நோயிடமிருந்து அவரை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக போராடினோம். ஆனால், நோயும், இயற்கையும் வென்று விட்டன. எனது தளபதி இசக்கி படையாட்சியை இயற்கை என்னிடமிருந்து பறித்துக் கொண்டு விட்டது. தைலாபுரம் தோட்டத்தில் நான் இருக்கும் நாளெல்லாம் காலையும், மாலையும் சந்திக்கும் இசக்கி படையாட்சி கட்சிப் பணிகள் குறித்து விவாதிப்பார்.

இன்னும் சிறிது நேரத்தில் இசக்கி வருவார் என்று நான் நினைத்தால், அடுத்த சில வினாடிகளில் அவர் என் முன் நிற்பார். இனி நான் அப்படி நினைக்கும் போதெல்லாம் ஏமாற்றமே மிஞ்சும்.இசக்கி படையாட்சியை இழந்து வாடும் அவரது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இசக்கி படையாட்சியின் சொந்த ஊரான விக்கிரமசிங்க புரத்தில் நடைபெறும் இறுதி வணக்க நிகழ்வுகளில் பா.ம.க. நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்துவர்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios