Asianet News TamilAsianet News Tamil

மேட்டூர் அணைக்கு 90வது பிறந்தநாள்.! பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் கர்நாடக அரசின் சதியை முறியடிக்கனும்- ராமதாஸ்

மேட்டூர் அணைக்கு முன்பாக மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதன் மூலம்  மேட்டூர் அணையை பயனற்றதாகவும்,  பாலைவனமாகவும்  மாற்ற கர்நாடக அரசு சதி செய்கிறது என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

Ramadas has accused the Karnataka government of conspiring to desert the Mettur dam
Author
First Published Aug 21, 2023, 11:43 AM IST

மேட்டூர் அணைக்கு 90வது பிறந்தநாள்

மேட்டூர் அணை கட்டி 90 ஆண்டுகள் ஆனதையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண்மைக்கு தண்ணீர் வழங்கும் காவிரி  ஆறு உழவர்களின் தாய் என்றால், காவிரியில்  வெள்ளம் போல வரும் தண்ணீரை தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப வழங்கும் மேட்டூர் அணை  தான் உழவர்களின் தந்தை. அந்த உழவர்களின் தந்தைக்கு  இன்று 90-ஆம் பிறந்தநாள். 1924-ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமானப் பணிகள் 1934-ஆம் ஆண்டில் நிறைவடைந்து அந்த ஆண்டின் ஆகஸ்ட் 21-ஆம் நாள் தான்  அணை திறக்கப்பட்டது. 89 ஆண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்களை  செழிக்கச் செய்து கொண்டிருக்கும் மேட்டூர் அணைக்கு அதன் பிறந்தநாளில் வாழ்த்துகளுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Ramadas has accused the Karnataka government of conspiring to desert the Mettur dam

எதிர்ப்பை மீறி கட்டப்பட்டது தான் மேட்டூர் அணை

மேட்டூர் அணை கட்டப்பட்டதே நீண்ட வரலாறு ஆகும்.  மேட்டூர் அணை கட்டுவதற்கான திட்டங்களை முதன்முதலில் வகுத்தவர்களின் முதன்மையானவர் இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர். அவரது முயற்சி வெற்றியடையாத நிலையில், திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யாவின் வழிகாட்டுதலுடன், ஆங்கிலப் பொறியாளர்கள் எல்லீஸ், ஸ்டான்லி ஆகியோர் தலைமையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பத்தாண்டுகள் உழைத்து கட்டியது தான் மேட்டூர் அணை ஆகும். மேட்டூர் அணை என்பதே புரட்சியின் அடையாளம் தான்.

காவிரியையும்,  காவிரிப்பாசன மாவட்டங்களையும் கர்நாடகம் இப்போது எப்படி வஞ்சிக்கிறதோ, அதேபோல் தான், முந்தைய நூற்றாண்டிலும் மைசூர் சமஸ்தானம் வஞ்சித்துக் கொண்டிருந்தது. காவிரியின் குறுக்கே  மேட்டூர் அணையை கட்ட பல பத்தாண்டுகளாக  மைசூர் சமஸ்தானம் அனுமதி அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் கர்நாடகத்தின் எதிர்ப்புகளையெல்லாம் மீறி கட்டப்பட்டது தான் மேட்டூர் அணை ஆகும். மேட்டூர் அணைக்கு முன்பாக மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதன் மூலம்  மேட்டூர் அணையை பயனற்றதாகவும்,  பாலைவனமாகவும்  மாற்ற கர்நாடக அரசு சதி செய்கிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராது.

Ramadas has accused the Karnataka government of conspiring to desert the Mettur dam

பாலைவனமாக்க கர்நாடக திட்டம்

கர்நாடகத்தின் இந்த சதித் திட்டத்தை முறியடிக்க ஒட்டுமொத்த தமிழகமும்  ஒன்றாக இணைந்து போராட வேண்டும். மேகதாதுவை தடுத்து மேட்டூர் அணையைக் காக்க எத்தகைய தியாகத்தையும் செய்ய பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. காவிரி பாசன மாவட்டங்களை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பசுமை பூமியாக காக்கும் பணியை மேட்டூர் அணை செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

அண்ணாமலையின் சொத்து மதிப்பு என்ன.? எத்தனை கார்.? எவ்வளவு நகை வைத்திருக்கிறார் தெரியுமா.?

Follow Us:
Download App:
  • android
  • ios