ஒன்றரை நாட்களுக்கு ஒரு விபத்து.! விபத்துச் சாலையான விரைவுச் சாலை.! 6 வழிச்சாலை பணி என்ன ஆச்சு - ராமதாஸ்

திருப்பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான சாலையில் பயணம் செய்வதே சாகசம் தான். அந்த பயணத்தின் போது விபத்துகள் நடப்பது, ஊர்திகள் பழுதடைவது உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும்  ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Ramadas demand to complete the 6 lane road from Thirupperumbudur to Walaja as soon as possible

காலதாமதம் ஆகும் சாலைப்பணி

திருப்பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் காலதாமதம் ஆவதால் தொடர் விபத்து ஏற்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்ட அறிக்கையில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும், 50% பணிகள் கூட இன்னும் நிறைவடையவில்லை.

விரைவுச்சாலையாக மாற வேண்டிய இச்சாலை ஒன்றரை நாளுக்கு ஒரு விபத்து நடக்கும் சாலையாக மாறிவிட்ட நிலையில், சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் முதன்மைச் சாலைகளில் ஒன்றான சென்னை & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்ட நிலையில், 

Ramadas demand to complete the 6 lane road from Thirupperumbudur to Walaja as soon as possible

6 வழிச்சாலை திட்டம் என்ன ஆச்சு.?

சென்னை மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ நீளச் சாலை 4 வழிப்பாதையாகவும், குண்டு குழிகள் நிறைந்ததாகவும் இருந்தால், அதில் பயணிப்பது மிக மோசமான அனுபவமாகவே இருந்தது. இது தொடர்பாக பல அறிக்கைகளை வெளியிட்டதுடன், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு தொடர்ந்து கடிதங்களையும் எழுதினேன். அதன்பயனாக இச்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் 2014-ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு 2018-ஆம் ஆண்டின் இறுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் திருப்பெரும்புதூர் வரையிலான 23 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டன. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான 71 கி.மீ நீள சாலைவிரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் 2021-ஆம் ஆண்டிற்குள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், 50% பணிகள் கூட முடியவில்லை.

Ramadas demand to complete the 6 lane road from Thirupperumbudur to Walaja as soon as possible

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தோல்வி

திருப்பெரும்புதூர் முதல் வாலாஜா வரை மொத்தம் 34 மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும்; ஆனால், இதுவரை 11 பாலங்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இது மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவு ஆகும். சாலை விரிவாக்கப் பணிகளும் ஆங்காங்கே துண்டு துண்டாக முடிக்கப்பட்ட நிலையில், முடங்கிக் கிடக்கின்றன.  சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திசையிலும் 1.25  லட்சம் ஊர்திகள் பயணிக்கின்றன. அவ்வளவு ஊர்திகள் பயணிப்பதற்கு 4 வழிச்சாலை போதுமானதாக இல்லை என்பதால் தான், அதை 6 வழிச்சாலையாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன்.  விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும் போது, இதை கருத்தில் கொண்டு விரைவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது.

Ramadas demand to complete the 6 lane road from Thirupperumbudur to Walaja as soon as possible

ஒன்றரை நாட்களுக்கு ஒரு விபத்து

விரிவாக்கப்பணிகளின் காரணமாக திருப்பெரும்புதூர் - வாலாஜா இடையிலான சாலை இருவழிப் பாதையாக சுருங்கி விட்டது. சாலை முழுவதும் குண்டும் குழியுமாக சீர்குலைந்துள்ளன. சாலை எங்கு குறுகும்; எங்கு திரும்பும் என்பதே தெரியாததாலும், சாலைவிளக்குகள் இல்லாததாலும் ஒரு வினாடி கவனம் சிதறினாலும் விபத்து நடப்பதைத் தடுக்க முடியாது. வாலாஜா - திருப்பெரும்புதூர் இடையிலான சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கிய பிறகு 2019-ஆம் ஆண்டு  ஏப்ரல் முதல் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றரை ஆண்டுகளில், அதாவது 1277 நாட்களில் இந்த பகுதியில் மொத்தம்  786 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதாவது ஒன்றரை நாட்களுக்கு ஒரு விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த விபத்துகளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர்; 761 பேர் படுகாயமடைந்து உயிர் பிழைத்துள்ளனர்.

Ramadas demand to complete the 6 lane road from Thirupperumbudur to Walaja as soon as possible

பணிகளை விரைந்து முடித்திடுக

திருப்பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான சாலையில் பயணம் செய்வதே சாகசம் தான். அந்த பயணத்தின் போது விபத்துகள் நடப்பது, ஊர்திகள் பழுதடைவது உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும்  ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இவற்றிலிருந்து பயணிகளுக்கு எப்போது விடுதலை கிடைக்கும்? என்பது தான் தெரியவில்லை.திருப்பெரும்புதூர் - வாலாஜா நெடுஞ்சாலை விபத்துச்சாலை என்ற நிலையிலிருந்து விரைவுச்சாலையாக மாற்றப்பட வேண்டும். அதற்காக தடைபட்டுக் கிடக்கும் பணிகளை மீண்டும் தொடங்கவும், குறித்த காலத்திற்குள் முடித்து 6 வழிச்சாலையை ஊர்திகள் போக்குவரத்திற்கு திறந்து விடவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடியாமல் தவிக்கும் அமலாக்கத்துறை.!அடுத்த கட்ட திட்டத்திற்கு தயாரான பிளான்?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios