Ram Setu not a natural formation but man made US TV show suggests citing scientists

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ராமரால் கட்டப்பட்டதாக இன்றும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் ராமர் பாலம் என்பது, புராணக் கதையா, இயற்கையாக உருவானதா அல்லது மனிதனால் கட்டப்பட்டதா என்ற விவாதத்தினை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அமெரிக்க டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்று அமைந்திருந்தது. 

ராமர் பாலம் என்பது இயற்கையாக உருவானது இல்லை, அது மனிதர்களால் கட்டப்பட்டதுதான் என அமெரிக்காவின் அறிவியல் சேனலின் டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் நிகழ்ச்சியின் விளம்பர வீடியோ ஒன்றில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

தமிழகத்தின் ராமேஸ்வரம் அமைந்துள்ள பாம்பன் தீவுகளின் தனுஷ்கோடி பகுதியில் இருந்து அருகே உள்ள நீண்ட பகுதியான இலங்கையின் மன்னார் வளைகுடா வரை மேடான பகுதியாக இந்தப் பாலம் திகழ்கிறது. இது, சுண்ணாம்புக் கற்களால் ஆனது என்கிறார்கள். எனவே இது இயற்கையாக உருவானதுதான் என்று சிலர் கூறுகின்றனர். 

ஆனால், இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயண காவியத்தின் படி, இலங்கையில் ராவணானால் சிறை வைக்கப் பட்டிருந்த சீதையை மீட்க, ராமர் தன் வானரப் படையில் இருந்த நளன் நீளன் ஆகிய இரு பொறியாளர்கள் துணையுடன் வானரங்கள் மூலம் இதைக் கட்டினார் என்று கூறப்படுகிறது. 

ஆனால், இது குறித்து தகவலைப் பதிவிடுள்ள என்சைக்ளோபீடியா, ஐஸ் ஏஜ் எனப்படும் பனிக் காலத்தில், இந்தப் பாலம் இயற்கையாக உருவானது என புவியியல் ஆதாரங்கள் அடிப்படையில் கணித்தாக கூறியுள்ளது. ஆனால், ஐஸ் ஏஜ் என்பதன் அடிப்படையில், பூமத்திய ரேகையை ஒட்டிய, அதாவது கடக ரேகை பகுதியில் இருந்துதான் மக்கள் துருவப் பகுதிகளுக்கு நகர்ந்தார்கள் என்று கூறப்படும். அதன் அடிப்படையில் பார்த்தால், பாரதம் உள்ளிட்ட பூமியின் நடுப்பகுதியில் இருந்துதான் துருவப் பகுதிகளுக்கு கிழக்கில் இருந்து மேற்கே நகர்ந்தார்கள் என்பர். 

இப்படி, ராமர் பாலம் என்று சொல்லப்படுவது, நம்நாட்டின் புராதனப் பெருமையைக் காட்டும் இடமாக மாறிப் போன நிலையில், பின்னாளில் வந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இது ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று பெயர் பெற்றது. சற்றே மேடான இந்தப் பகுதியில் வழியே கப்பல்கள் எதுவும் செல்ல முடியாது. எனவே, இந்தப் பாலத்தை மேலும் வலுப்படுத்தி, முறையான நவீன பாலத்தைக் கட்டி, இந்தியா இலங்கைக்கு இடையே வர்த்தக ரீதியாக இயங்க வேண்டும் என்று கோரினர். பாரதியார் தம் பாடலில் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாடினார். 

ஆனால், வங்காள விரிகுடாவை ஒட்டிய நகர்களில் இருந்து அரபிக் கடல் பகுதியில் உள்ள இடங்களுக்கு கப்பல்களில் வர்த்தகம் நடைபெற, கடல் பகுதியை ஆழப்படுத்தி, சேது சமுத்திர திட்டம் கொண்டு வர மத்தியில் ஆட்சியில் இருந்தோர் அப்போது முயன்றனர். ஆனால், மத்திய அரசின் சேது சமுத்திர திட்டம் பெரும் விவாதப் பொருள் ஆனது.

இப்படி, சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால், கிழக்கு- மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு குறையும். பயண நேரமும் 30 மணி நேரம் குறையும். இலங்கையைச் சுற்றிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டு, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாவது ஆட்சிக் காலத்தில், 2005ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. 

ஆனால் இந்த சேது சமுத்திர திட்டப் பணிகளால் ராமேஸ்வரத்துக்கும் மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது. 

ஆனால், மத்தியில் பாஜக., ஆட்சிக்கு வந்த பின் ‘சேது சமுத்திர திட்டம், ராம சேது பாலத்துக்கு பாதிப்பு வராமல் மாற்று வழியில் நிறைவேற்றப்படும்’ என கூறப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றும்போது, ராம சேது பாலத்தை தகர்க்காமல், நிலப் பகுதியில் பனாமா கால்வாய் போல் அமைக்கலாம் என்று கூறப்பட்டது. அதற்கான யோசனைகளும் மத்திய அரசால் முன்னெடுக்கப் பட்டு, ராமர் பாலத்துக்கு பாதிப்பு வராமல் மாற்று வழியில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமர் பாலம் என்பது வெறும் இதிகாசக் கதைதானா அல்லது மனிதர்களால் கட்டப்பட்டதா என்ற விவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்க அறிவியல் சேனலில் ஆய்வுகள் அடங்கிய ஆராய்ச்சித் தொகுப்பு வெளியாகிறது. 

இதில், இந்தியா- இலங்கையை இணைக்கும் ராமர் பாலம் தொடர்பான செய்தித் தொகுப்பு அமெரிக்காவின் அறிவியல் சேனல் டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸில் வெளியானது. இந்த சேனலில் ஒளிபரப்பப்பட உள்ள விளம்பர வீடியோவில் ராமர் பாலம் இயற்கையானது அல்ல, மனிதரால் கட்டப்பட்டதுதான் எனக் கூறப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தனது டிவிட்டர் பதிவில் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறி இந்த வீடியோ இணைப்பை பகிர்ந்துள்ளார். பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் ஸ்வாமி தான் இந்தப் பகுதிக்கு செல்லவுள்ளதாகக் கூறினார். இந்த வீடியோவில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் முக்கிய இடம்பெற்றுள்ளது.

இதில் மணல் திட்டுக்கள் இருப்பதாகவும், இந்த மணல் திட்டுகளை உள்ளடக்கிய கற்களை ஆய்வு செய்ததில் அவை 4 ஆயிரம் ஆண்டு பழைமையானவையாக உள்ளன என்றும் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், மணல் திட்டுகளின் மேல் உள்ள மிதக்கும் கற்கள் சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவை என்று கூறியுள்ளனர். இந்த அமைப்பைப் பார்த்தால், இந்தப் பாலம் இயற்கையானது அல்ல, மனித சமூகத்தின் மாபெரும் சாதனை என்றுதான் கருத வேண்டும் என்று வீடியோவில் கூறியுள்ளனர்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ராமர் என்பது புராணக் கதை என்று சொன்னது. ராமர் என்பதும் கற்பனை என்றார்கள். ஆனால், இப்போது 50 கிமீ., நீளமுள்ள இந்தப் பாலம் மனிதரால் கட்டப்பட்டது என்றும், இயற்கையானது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

Are the ancient Hindu myths of a land bridge connecting India and Sri Lanka true? Scientific analysis suggests they are. #WhatonEarthpic.twitter.com/EKcoGzlEET

— Science Channel (@ScienceChannel) December 11, 2017