Asianet News TamilAsianet News Tamil

செல்போன் பேச்சு ராம்மோகன் ராவ் வேலையே போச்சு - நட்சத்திர ஓட்டல்களில் நடிகைகளுக்கும் விருந்து

ram mohan-roa-suspended-7v3zmp
Author
First Published Dec 24, 2016, 9:32 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


சென்னை சைதாப்பேட்டை நந்தனம் சேமியர்ஸ் சாலையில் உள்ள ராமமோகனராவ் மகன் விவேக்குக்குச் சொந்தமான தனியார் அலுவலகம், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது நண்பரும், உயர்நீதிமன்ற வக்கீலுமான அமலநாதன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். 

அமலநாதன் வீட்டில் இருந்து இருந்து ரூ.9.35 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, சேகர் ரெட்டியிடம் இருந்து அவரது டைரி மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும், அவற்றில் தமிழக அமைச்சர்கள் உள்பட அதிமுக முக்கிய புள்ளிகள், மேலும் சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நடைபெற்ற 6ம் தேதி சேகர் ரெட்டியுடன், ராமமோகன் ராவ் நீண்ட நேரம் பேசினார். அப்போது பண பரிமாற்றம் குறித்து அவர்கள் பேசியதை செல்போன் நிறுவனங்களில் இருந்து பெற்றிருக்கிறோம்.

மேலும், சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள தகவல்கள், ஆவணங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ததில், அவரிடம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கம் ஆகியற்றில் ராமமோகன் ராவ் மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோருக்கு சொந்தமானவையும் அடக்கம் என தெரிந்துள்ளது.

அமெரிக்காவில் இருந்த விவேக் கடந்த 2011ம் ஆண்டில்தான் இந்தியாவுக்கு வந்துள்ளார். சில மாதங்களிலேயே 6க்கும் மேற்பட்ட கம்பெனிகளை துவக்கியிருக்கிறார். அவற்றில் 4 கம்பெனிகள் செயல்படுகின்றன.

அதில் விர்டு டெக்னாலஜிஸ், புளூ ஓசியன் பி அண்ட் ஏ சர்வீசஸ், டிரான்ஸ் எர்த் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய 3 கம்பெனிகளும் சேமியர்ஸ் சாலையில் இயங்குகின்றன. இவற்றில் நடத்திய ரெய்டுகளில் பல லேப்டாப்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

முதல் கட்ட ஆய்வில், இந்த கம்பெனிகளில் அவர் செய்துள்ள முதலீடு பணம், கணக்கு காட்டப்படாத பணமாக உள்ளது. மேலும், லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்கிடையே, சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அதிமுக முக்கிய பிரமுகர்கள், மேலும் 12 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மத்திய மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் மூலம்தான் சேகர் ரெட்டி மூத்த அமைச்சருக்கு அறிமுகமானார். தென் மாவட்டத்தில் அந்த அமைச்சர் தற்போது முக்கிய பதவியில் உள்ளார். வடமாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர், மேற்கு மண்டலத்தில் செல்வாக்காக இருக்கும் அமைச்சர் ஒருவர் என 4 அமைச்சர்கள் நெருங்கிய தொழில் தொடர்புகளை சேகர் ரெட்டியுடன் வைத்துள்ளனர். அவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் அடிக்கடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இது குறித்த ஆவணங்களையும், வீடியோ ஆதாரங்களையும் திரட்டும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஐபிஎஸ் அதிகாரிகளில் ஏடிஜிபி, ஐஜி உள்ளிட்டோரும் சேகர் ரெட்டியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.

இவர்களுடன் நடந்த பண பரிமாற்றங்கள் மற்றும் இதர விவரங்கள் டைரியிலும், ஆவணங்களிலும் தெரியவந்துள்ளன. சென்னை அருகே உள்ள ஒரு மாவட்ட கலெக்டருக்கு சமீபத்தில் ஒரு கோடி ரூபாயை அவர் கொடுத்துள்ளார். அதுவும் டைரியில் இடம்பெற்றுள்ளது.

அதைத் தவிர கட்சிகளுக்கு கொடுத்த பணம், தனிப்பட்ட முறையில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தோம் என்பதை அவர் தெளிவாக எழுதி வைத்துள்ளார். மேலும், புதிய நோட்டுகளை மாற்ற யார் யார் உதவி செய்தார்கள் என்பதையும் அவர் தெளிவாக கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம்தான் அவர் பணத்தை பெரிய அளவில் மாற்றியுள்ளார். இதற்கு கூட்டுறவு வங்கியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் அதிக அளவில் உதவி செய்துள்ளனர்.

இந்த தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த தகவல்களை எல்லாம் உறுதி செய்து கொண்ட பின் அடுத்தடுத்து ரெய்டுகள் நடத்தப்படலாம். அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ தங்களிடம் உள்ள கருப்பு பணம் மற்றும் சொத்துக்களை மறைக்க முயன்றாலும் அது நடக்காது.

ஏற்கனவே பல ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்தடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தும் அதிரடி சோதனை மாநில அரசியலில் பல அதிரடிகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios